ஆந்திராவில் கொரோனாவால் பாதித்த டாக்டரை காப்பாற்ற, கிராம மக்கள் நிதி வசூல் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் பாஸ்கர ராவ். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். கொரோனாவால் பாதித்தவர்களுக்கும் ஆறுதல் கூறி, நோய் தொற்றில் இருந்து மீள உதவி செய்தார். தடுப்பூசி போடுவதற்கு கிராம மக்கள் பயந்தபோது, பாஸ்கர ராவ் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வைத்தார். இரவு பகல் பாராமல் கொரோனா வார்டுகளிலும் சிகிச்சை அளித்து வந்தார்.இந்நிலையில், அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது நுரையீரல் கடுமையாக பாதித்து விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
உடனடியாக, அவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு 1.50 கோடி முதல் 2 கோடி வரை செலவாகும் என கூறப்பட்டுள்ளது. அதனால், அவருடைய குடும்பத்தினர் திகைத்துள்ளனர். இதையறிந்த கிராம மக்கள், தங்களை காப்பாற்றிய டாக்டர் பாஸ்கர ராவுக்கு உதவ முடிவு செய்து நிதி வசூலித்தனர். அதில், 20 லட்சம் நிதி வசூலானது. இது பற்றி கேள்விப்பட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், பாஸ்கர ராவுக்கான மருத்துவ செலவு தொகையான 1.50 கோடியை அரசே ஏற்கும் என நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால், டாக்டரின் குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...