ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் 2019-ம் ஆண்டு அரசுப் பணிகளுக்கான நியமனம் மற்றும் தேர்வு முறைகள் குறித்து விரிவான உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில், ஆந்திர பொதுச் சேவை ஆணையத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் நேர்முகத் தேர்வினை ரத்து செய்வது தொடர்பாகக் கலந்தாலோசிக்கப்பட்டு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் குரூப் -1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளின் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் இனிமேல் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது என்றும் அதற்குப் பதிலாக எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்றும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, அரசுப் பணிகளில் சேர விரும்புவோர் நேர்முகத் தேர்வின் போது அரசு அதிகாரிகளுக்குச் சட்ட விரோதமாக லஞ்சம் கொடுத்து அரச பணிக்குத் தேர்வாகி விடுவதால் தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் போய் விடுவதாக ஏராளமானோர் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெகன்மோகன் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், ஆந்திர மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. அரசுப்பணிக்கான ஆள் சேர்ப்பு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையையும், நம்பிக்கையும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மாநில அரசின் இந்த முடிவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...