பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கு பள்ளி அளவில், தினமும் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களில், பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. மே, 5ல் துவங்கவிருந்த பொதுத்தேர்வு, கொரோனா தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
வீட்டில் இருக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வுக்கு சிறப்பாக தயாராகும் வகையில், அவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.பொதுத்தேர்வுக்கு தேவையான முக்கிய வினாக்கள், பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பயிற்சி அளிப்பது முக்கிய தேவையாகும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், ஒரு அலகுக்கு வினா, விடைகள் தேர்வு செய்து, அதை தினசரி அலகு தேர்வாக நடத்த வேண்டும்.
இந்த தேர்வு வினாத்தாள் தினமும், முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' குரூப்பிற்கு அனுப்பப்படும். அவற்றை எடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைனில் பகிர்ந்து, தினமும் தேர்வு எழுத வைத்து, விடைத்தாள்களை பெற வேண்டும்.
அவற்றை அன்றே திருத்தி, மதிப்பெண் விபரத்தை, மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, கூடுதல் பயிற்சி அளிக்க, ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...