அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யுஜிசி தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் முறையாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பொன்முடி அளித்த பேட்டி:
''புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் அது மாநில உரிமைகளில் தலையிடுவது. அதை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு குழுவை நியமித்தார். நானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும் சேர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி அதில் உள்ள குறைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
அந்த அடிப்படையில் நிச்சயமாகப் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது. முதல்வர் ஆலோசனையின்படி உயர் கல்வித்துறை அமைச்சராக நானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் துறை ரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தவறுதலான முறையில் கடந்த ஆட்சிக் காலங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவை எதையும் நம்பி சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற வேண்டாம். முதல்வருடன் கலந்து பேசி, உயர் கல்வித் துறைச் செயலருடன் ஆலோசித்து, முறையாகப் பணி நிரந்தரம் செய்ய உள்ளோம்.
யுஜிசி தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதில் தரகர்களின் குறுக்கீட்டை யாரும் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட வகையில் பணம் பெறுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்''.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...