அரபிக் கடலில் உருவான 'டாக்டே' புயல், கடந்த, 17ம் தேதி நள்ளிரவு குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கும், டையு, உனா பகுதிக்கும் இடையே கரையை கடந்தது.இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில், புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 22ம் தேதி, வடக்கு அந்தமான் கடலுக்கும், வங்கக் கடல் பகுதிக்கும் இடையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.பின், அது படிப்படியாக தீவிரமடைந்து, அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக மாறலாம். இதனால், வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில், அந்தமான் நிகோபார் தீவுகளின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யலாம். பின், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும், 26ம் தேதி மாலை, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளை, இந்த புயல் சென்றடையலாம். ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், 25ம் தேதி மாலை முதல் கன மழை துவங்கும். 27ம் தேதி, புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும், 21ம் தேதி, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...