கொரோனா பரவல் இரண்டாம் அலையால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், நேற்று முதல் மாநிலம் தழுவிய இரு வார ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவாதம்
பொதுத்தேர்வை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தேர்வை நேரடியாக நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், உயர்கல்விக்கு மிக முக்கியம் என்பதால், மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிப்பு மட்டுமின்றி, மதிப்பெண் பட்டியலும் வழங்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து தேர்வை எழுதினால், அவர்களில் யாருக்காவது அறிகுறி இல்லாத தொற்று இருந்தால், அது மற்ற மாணவர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, மாணவர்களை ஓரிடத்தில் சேர்ப்பது தற்போது ஆபத்தானதாக முடியும் என்றும், பேசப்பட்டது.ஆன்லைனில் தேர்வை நடத்தினால், இணையதளம் கிடைக்காமல், கிராமப்புற மற்றும் தொலை துார பகுதி மாணவர்கள், நகர்ப்புற ஏழை மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போகலாம் என, கருத்துகள் கூறப்பட்டன.
எனவே, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, ஆல் பாஸ் வழங்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு உள்ளது.தேர்வு ரத்தானால், மாணவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே பள்ளி அளவில் நடந்த தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை இணைத்து, மதிப்பெண் வழங்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, கூட்டத்தில் பேசிய விபரங்கள் மற்றும் பரிந்துரை அறிக்கையை, முதல்வரிடம் சமர்ப்பித்து, அவரின் கருத்தை பெறலாம் என, பள்ளிக்கல்வி அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்
அதன்படி, பிளஸ் 2 தேர்வு ரத்தா, இல்லையா என, விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். ஆலோசனை கூட்டத்துக்கு பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:பிளஸ் 2 தேர்வை தற்போதைய சூழலில் நடத்தலாமா என விவாதித்தோம். மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளோம். தற்போது அவர்களை ஓரிடத்திற்கு வரவைத்து தேர்வை நடத்தும் போது, யாருக்காவது தொற்று இருந்து, அதனால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவே, பிளஸ் 2 தேர்வு விஷயத்தில், மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறைகளையும், அதிகாரிகளின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். இதுகுறித்த முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
hmm intha new education minister romba theliva irukaru
ReplyDeleteS ivaru mattum exam cancel nu sollitaruna ivaru thaan best educational minister
ReplyDelete