பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2017ல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 1,33,568 பேர் தேர்வு எழுதினர். முடிவுகள் வெளியாகி சுமார் 2,110 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் இத்தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட 196 பேரும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.
தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களை நியமிக்க கோரியும் பலர் ஐகோர்ட்டில் வழக்கு ெதாடர்ந்தனர். இதில், தேர்வு ரத்து செய்யப்பட்டது சரி என ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில், ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரர் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட ஐகோர்ட்ைட அணுகி நிவாரணம் பெறலாம் என கூறியது. இதையடுத்து தேர்வில் கலந்து கொண்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். அதில், தேர்வை ரத்து செய்தது தவறு என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கூறியிருந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி, முறைகேடு நடந்ததால் தேர்வை ரத்து செய்தது சரிதான் என தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 2017ல் நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை. தேர்வில் பங்கேற்ற யாருக்காகவும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...