மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கைப்படி, பல்வேறு திட்டங்களை, வரும் மே மாதம் அறிவிக்க உள்ளது.
மத்திய அரசு, கல்வித் துறையில் சீர்திருத்தங்களை செய்யும் நோக்கில், 1986ல், தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிஉள்ளது. இதற்கு, 2020ல், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
பரிசீலனை
இதையடுத்து, புதிய தேசிய கல்விக் கொள்கைப் படி, கல்லுாரிகளில் பொது நுழைவுத் தேர்வு, பட்டப் படிப்பில் இடைநிற்றலுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
இந்தத் திட்டங்கள், அரசு துறைகளின் அனுமதிக்காக பரிசீலனையில் உள்ளன. அனுமதி கிடைத்ததும், புதிய திட்டங்கள் குறித்து, மே மாதம் அறிவிப்பு வெளியாகி, நடப்பு கல்வியாண்டில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. புதிய திட்டப்படி, அனைத்துக் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
கல்லுாரி சேர்க்கையில் உள்ள சிரமங்களை குறைக்கும் நோக்கில், இந்த திட்டம் அறிமுகமாக உள்ளது. அடுத்து, கல்வி ஊக்கப் புள்ளிகள் வங்கி என்ற திட்டம், அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்தத் திட்டத்தில், மாணவர்கள், ஒரு பாடத் திட்டத்தில் ஈட்டும் ஊக்கப் புள்ளிகளை, சேமித்து, தங்களுக்கு உரிய வேறு பாட திட்டத்தை உருவாக்க பயன்படுத்தலாம். புதிய திட்டத்தில் ஒன்றாக, மாணவர்கள் விரும்பும் போது, மூன்று அல்லது நான்காண்டு படிப்பில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படும்.
சான்றிதழ்
இதன்படி, ஒரு மாணவர் கல்லுாரியில் சேர்ந்த முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் வழங்கப்படும்.இரண்டாவது ஆண்டு படிப்பை நிறுத்தும் சூழல் ஏற்பட்டால், பட்டயச் சான்றிதழ் அளிக்கப்படும். மூன்றாண்டு படிப்பை முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.நான்காண்டு படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சியுடன் கூடிய பட்டம் வழங்கப்படும். இதுபோன்ற பட்டயம் மற்றும் பட்டங்கள் வழங்க, ஒரு மாணவர், தன் கல்வி காலத்தில் சேமிக்கும் ஊக்கப் புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கடந்த, 2019 மத்திய பட்ஜெட்டில், 'கல்வித் துறை ஆய்விற்கு, தேசிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்' என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இம்மையத்திற்கு, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சகங்கள் ஆய்வுக்காக பல்வேறு துறைகளுக்கு மானியம் வழங்கு கின்றன. அவை, தேசிய ஆராய்ச்சி மையம் என்ற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளன. இந்த மையம், கல்வி, மருந்து, தொல்லியல், கலை, வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்யும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...