சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
கருத்துக் கணிப்பு
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல் இந்த முறையும் அதிமுக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேசமயம் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியும் இந்த தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில், இந்த தேர்தலில் மக்களின் மனநிலை என்ன? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்றே அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களைப் பொருத்தவரை அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என 42 சதவீதம் பேரும், வாக்களிக்க மாட்டோம் என்று 56 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கணக்கெடுப்பின்படி, அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என 45 சதவீதம் பேரும், வாக்களிக்க மாட்டோம் என்று 50 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.
இதேபோல் திமுக ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் ஆம் என்றும், 46 சதவீதம் பேர் இல்லை என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற யாருக்கு வாய்ப்பு அதிகம்? என்ற கேள்விக்கு திமுக கூட்டணிக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 41 சதவீதம் பேரும், கடும் போட்டி இருக்கும் என 11 சதவீதம் பேரும், மற்றவர்களுக்கு வாய்ப்பு என ஒரு சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உங்களின் முதலமைச்சர் தேர்வு யார்? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக 47 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும் கருத்து பதிவிட்டுள்ளனர். சீமான் 4 சதவீதம், கமல் 2 சதவீதம், டிடிவி தினகரன் 1 சதவீதம், மற்றவர்கள் 4 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளனர். முதலமைச்சரின் செயல்பாடு எப்படி? என்ற கேள்விக்கு நன்று என 37 சதவீதம் பேரும், சரியில்லை என 43 சதவீதம் பேரும், சராசரியாக இருப்பதாக 20 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.
2021 தேர்தல் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் என்று 49 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தொங்கு சட்டமன்றம் அமையும் என்று 10 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
அதிமுக அரசின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்ற கேள்விக்கு இல்லை என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இல்லை என 52 சதவீதம் பேரும், ஆம் என 44 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
சசிகலாவின் அரசியல் வருகை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு இல்லை என 51 சதவீதம் பேரும், ஆம் என 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். அதிமுகவுக்கு சாதகம் என 11 சதவீதம் பேரும், திமுகவுக்கு சாதகம் என 14 சதவீதம் பேரும், திமுகவுக்கு பாதகம் என 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது. அதேசமயம், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான இடைவெளி மிக குறைவாகவே உள்ளது. எனவே, தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின்னர், கள நிலவரத்தில் மாற்றம் ஏற்படலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...