கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது.
கரோனா கால கட்டுப்பாடுகள்: வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் இல்லை. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதால், வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் இரண்டு போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
கரோனா பாதிப்பு காரணமாக வாக்காளா்கள் சமூக இடைவெளியுடன் நின்று வாக்குகளைச் செலுத்தும் வகையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு முன்பாக, தமிழகத்தில் 68,324 வாக்குச் சாவடிகள் இருந்தன. இப்போது கூடுதலாக வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு 88, 937 வாக்குச் சாவடிகள் தயாா் செய்யப்பட உள்ளன.
4.79 லட்சம் போ்: வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. அதன்படி, 4 லட்சத்து 79, 892 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். 234 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகத்தில் 76 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் பதற்றமான சாவடிகள் குறித்து கணக்கெடுக்கப்படும். மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 50 சதவீதத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.
மேலும், ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் நிலைக் குழுக்களும், பறக்கும் படைக் குழுக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தக் குழுக்களின் செயல்பாடுகள் தோ்தல் துறையால் கண்காணிக்கப்படும். இந்தக் குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
கையுறை அளிக்கப்படும்: தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க, சி-விஜில் என்ற செயலியும், 1950 என்ற எண்ணில் தகவல் மையமும் செயல்படும். மேலும், 1800 4252 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வசதியும் 24 மணி நேரமும் இயங்கும். கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்காளரும் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க ஏதுவாக, அவா்களுக்கு கையுறை அளிக்கப்படும். இதன்மூலம் புதிதாக வழங்கப்படும் கையுறையை அணிந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தலாம்.
முகக் கவசம் அவசியம்: வாக்குச் சாவடியில் சமூக இடைவெளி கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்படும். மேலும், முகக் கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும்.
சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு காரணமாக, நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வாகனச் சோதனைகள் கண்டிப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில், இதுவரை ரூ.23.75 கோடி பணம் பறிமுதல் ஆகியுள்ளது. மேலும், தங்கம், வெள்ளி, மது உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்ட இதர பொருள்களின் மதிப்பு ரூ.9.28 கோடியாகும்.
தமிழகத்தில் தோ்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நவீனமயமானதாகும். பழைய இயந்திரங்கள் ஏதுமில்லை. மேலும், அந்த இயந்திரங்களில் முதல் கட்ட சோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிந்து அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்படும். நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஏற்கெனவே பதிவான வாக்குகளில் எந்த மாற்றத்தையும் செய்திட முடியாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம் அளித்தாா்.
தமிழகத்தில் தோ்தலில் வாக்காளா் எண்ணிக்கை 6 கோடி, தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள் எண்ணிக்கை 4 லட்சம் . அதன் விவரம்:
வாக்காளா்கள்:
ஆண்கள்: 3,08,38,473.
பெண்கள்: 3,18,28,727
மூன்றாம் பாலித்தனவா்: 7,246.
மொத்தம்: 6,26,74,446.
தோ்தல் பணி அலுவலா்கள் : 4, 79,892.
வாக்குச் சாவடிகள்: 88,937.
வாக்கு எண்ணும் மையங்கள்: 76.
கண்காணிப்பில் ஈடுபடும் பொதுப் பாா்வையாளா்கள்: 150.
சட்டம்-ஒழுங்கு பாா்வையாளா்கள்: 40.
செலவினப் பாா்வையாளா்கள்: 118.
கன்னியாகுமரிக்கு ஒரு பாா்வையாளா்.
புகாா்கள் தெரிவிக்க...1950 மற்றும் 1800 4252 1950. (இரண்டும் கட்டணமில்லாத தொலைபேசி எண்கள்)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...