Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலைச் சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சொல்லின் தாய் விருது: தமிழக அரசு அறிவிப்பு.

628542

கலைச் சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து இந்த ஆண்டு முதல் "சொல்லின் தாய் விருது" வழங்கப்படவுள்ளதாக அகரமுதலி இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டத் தொடக்க விழா இன்று சென்னை, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனக் கலையரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சித் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை மண்டலத்திலுள்ள 20 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 200 பேர் தெரிவு செய்யப்பட்டு, 50 பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நாள் என்ற வகையில் 02.02.2021 முதல் 05.02.2021 வரை நான்கு நாள்கள் சொல்லாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சொற்குவை மாணவத் தூதுவர்  பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநரும், கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநருமான கே.விவேகானந்தன் இ.ஆ.ப., நாட்டுக்கும் மொழிக்கும் இதுபோன்ற பணிகள்தான் மிகவும் தேவை என்று கூறினார். அகரமுதலி இயக்ககத்தின் மொழிப்பணிகள் வியப்பாக உள்ளதாகவும், புதுமையான மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை இவ்வியக்ககம் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பெருந்தொற்றுக் காலத்திலும்கூட 200 மாணவர்களுக்குச் சொல்லாக்கப் பயிற்சி அளிப்பதனைப் பாராட்டுவதாகவும், அகரமுதலி இயக்ககத்திற்குக் கல்லூரிக் கல்வி இயக்ககமும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்ககமும் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற சொல்லாக்கப் பயிற்சி வகுப்புகளையும் பயிலரங்குகளையும் பொறியியல் கல்லூரிகளிலும் அகரமுதலி இயக்ககம்  நடத்தி பொறியியல் சார்ந்த கலைச்சொற்களைத் திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றிய, 2020-ஆம் ஆண்டிற்கான தேவநேயப் பாவாணர் விருது பெற்ற முனைவர் கு. சிவமணி, அகரமுதலி இயக்ககத்தின் தற்போதைய செயற்பாடுகள் பாவாணரின் கனவுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் முழுவீச்சிலும் பெரிய அளவிலும் உலகத் தமிழர்களின் பாராட்டினைப் பெறும் வகையிலும் உள்ளதாகவும், அகரமுதலி இயக்ககத்திற்குத் தமிழ்நாடு அரசு அளித்துவரும் ஊக்கத்திற்காகவும் ஒத்துழைப்பிற்காகவும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும், இன்றைய தலைமுறை மாணவர்கள் எதனையும் ஏன்? எதற்கு? என்று ஆராயும் மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர் என்றும், இன்றைய கணினியுலகம் அதற்குரிய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகிறது என்றும், இவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் தமிழ் மொழியின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் அகரமுதலி இயக்கக இயக்குநர் தங்க.காமராசு, வரவேற்புரை வழங்கி, பயிற்சித் திட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றியதுடன், கலைச் சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து இந்த ஆண்டு முதல் அகரமுதலி இயக்ககம் சார்பில் "சொல்லின் தாய் விருது" வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அரசு சான்றிதழ் வழங்கப் பெறும் என்றும் தெரிவித்தார்.

நிறைவாக நன்றியுரை கூறிய சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும், பயிற்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா.இராவணன், அகரமுதலி இயக்ககத்தின் தமிழ்ப் பணிகளுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககப் பேராசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கும் என்றும், மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வருங்காலத்தில் புகழ்பெற்ற சொல்லாக்க வல்லுநர்களாக உருவாகி, தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு அகரமுதலி இயக்ககத்தின் திட்டங்களையும் செயற்பாடுகளையும் விளக்கும் பயிற்சிக் கையேடு வழங்கப்பட்டது. விழாவில், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவுள்ள பயிற்றுநர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive