பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னையில் 7-வது நாளாகத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் கல்விசார் இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு பகுதி நேரச் சிறப்பாசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் 12,483 பேர் பகுதி நேரச் சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரம் இரண்டு நாட்கள் பணியுடன், மாதம் ரூ.7,700 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர்.
அண்மையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ.7,700-ல் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தமிழக அரசு அறிவித்தது. வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே பகுதி நேரச் சிறப்பாசிரியர்களுக்குத் தொகுப்பூதியத்துக்குப் பதிலாக பணி நிரந்தரம்தான் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். சென்னை டிபிஐ வளாகத்தில், கடந்த 4-ம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியது.
இந்நிலையில், 7-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண் ஆசிரியர்கள் அதிக அளவில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சூழலில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பணி நிரந்தரம் வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்துப் பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...