தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 3 நாட்கள் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2ம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், மீண்டும் சட்டசபை நாளை (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது.
அன்றைய தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் படித்து முடித்ததும், அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இதில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
தற்போதைய
சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். மேலும் இன்னும் 2
மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இடைக்கால பட்ஜெட்டில்
புதிய திட்டங்கள், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த
பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பட்ஜெட்
கூட்டத் தொடர் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. பட்ஜெட் மீதான விவாதம்
முடிந்ததும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும்
என்று கூறப்படுகிறது. நாளை மாலை 5.30 மணியளவில் கோட்டையில் உள்ள
சட்டப்பேரவை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓ.பி.ராசாமி
ரெட்டியார் ஆகியோரின் திருவுருவ படங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி
நடைபெறுகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,
எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...