தனியார் பள்ளிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். அரசு ஆவணங்களும் கொள்கை முடிவுகளும் இந்திய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய மொழி மாற்ற மையம் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் குறித்து அவர் கூறியதாவது:
''தனியார் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 15 ஆயிரம் பள்ளிகள் வலுப்படுத்தப்படும்.
5 ஆண்டுகளுக்கு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். லடாக்கின் லே பகுதியில் புதிதாக மத்தியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
அரசு ஆவணங்களும் கொள்கை முடிவுகளும் இந்திய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய மொழி மாற்ற மையம் உருவாக்கப்படும். அதேபோல உயர் கல்வியைக் கண்காணிக்க தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்.
மாணவர்களின் ஊட்டச்சத்தைப் பலப்படுத்த மிஷன் போஷன் 2.0 அறிமுகம் செய்யப்படும். போஷன் அபியான் திட்டத்துடன் துணை ஊட்டச்சத்து திட்டத்தை இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். துணை ஊட்டச்சத்து திட்டம் அங்கன்வாடிகள் மூலம் அமல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் பழங்குடியினப் பகுதிகளில் 750 ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும். அதேபோல ஒவ்வொரு ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிக்கும் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் ரூ.20 கோடி நிதி, ரூ.38 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். பழங்குடியின மாணவர்கள் படிக்கும் மலைப்பகுதிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, ரூ.48 கோடியாக உயர்த்தப்படும்''.
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...