கொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை மையப்படுத்தி புதிய மொபைல் காலர் டியூன் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மொபைல் நெட்வொர்க்கிலும் கொரோனா காலர் டியூன் அமைக்கப்பட்டது. முதலில் இருமல் சத்தமும், அதைத் தொடர்ந்து கொரோனா எச்சரிக்கை வாசகங்களும் அடங்கிய காலர் டியூன் பொதுமக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் இருமல் சத்தம் மட்டும் நீக்கப்பட்டது. அதன்பின், நடிகர் அமிதாப் பச்சன் குரலில் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய காலர் டியூன் கொண்டு வரப்பட்டது. கொரோனாவால் அமிதாப் பச்சனும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் அறிவுரை வழங்குவது போன்ற காலர் டியூனை நீக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிய காலர் டியூன் கொண்டு வரப்பட்டுள்ளது. அமிதாப்புக்கு பதிலாக பெண் ஒருவர் பேசும் அந்த டியூனில், ‘‘புதிய ஆண்டு கொரோனா தடுப்பூசி வடிவத்தில் புதிய நம்பிக்கை ஒளியை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பானது, பயனுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்’’ என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...