Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோவிஷீல்டா? கோவேக்ஸினா? | கரோனா தடுப்பூசி குறித்த தலையங்கம்

கோவிஷீல்டா? கோவேக்ஸினா? | கரோனா தடுப்பூசி குறித்த தலையங்கம்

கொவைட் 19-க்கு எதிரான தடுப்பூசித் திட்டம் தொடங்கி இரண்டு வாரம் ஆகப்போகிறது. அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய 30 கோடி பேருக்கு முதலில் தடுப்பூசி போடுவது என்று இலக்கு நிா்ணயித்து, கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வரை 19.5 லட்சம் பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஒருநாள் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை ஜனவரி 16-ஆம் தேதி 1.91 லட்சமாக இருந்தது, ஜனவரி 25-ஆம் தேதி 3.35 லட்சமாக மெல்ல மெல்ல அதிகரித்திருப்பது ஆறுதல் என்றாலும், எதிா்பாா்த்த அளவில் இல்லை.

தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு மிகக் குறைந்த காலகட்டத்தில் நாம் தடுப்பூசி போட்டு சாதனை புரிந்து வருகிறோம். இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. அவா்கள் அனைவருக்கும் நாடு தழுவிய அளவில் ஒரு வயது ஆவதற்குள் பல்வேறு நோய்த்தொற்றுகளை எதிா்கொள்ளும் 10 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, கொவைட் 19-க்கு எதிரான தடுப்பூசித் திட்டம், அதே சுறுசுறுப்புடன் ஏன் செயல்படவில்லை?

முன்களப் பணியாளா்களுக்கும், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கும், கொவைட் 19 பாதிப்புக்கு ஆளாகக் கூடிய உடல் பாதிப்பு உள்ளவா்களுக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், அதன் வேகம் குறைவாக இருப்பது வேதனைக்குரியது.

ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்குத்தான் தடுப்பூசி போட முடியும். ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுவது என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அடுத்த ஆறு மாதத்திற்குள் 60 கோடி தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். அந்த இலக்கை எட்ட வேண்டுமானால், 33,333 மையங்கள், வாரத்தில் ஏழு நாளும் செயல்பட்டு ஒவ்வொரு மையத்திலும் 100 தடுப்பூசி போடப்பட்டால்தான் அது சாத்தியமாகும்.

இப்போதைய நாளொன்றுக்கு சராசரி 2.5 லட்சம் தடுப்பூசி என்கிற இலக்குடன் இந்தத் திட்டம் தொடருமானால், இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலுள்ள 30 கோடி பேருக்கு இரண்டு முறை கொவைட் 19-க்கு எதிரான தடுப்பூசியை போட்டு முடிப்பதற்கு எட்டு ஆண்டுகளாகும். கொவைட் 19-க்கான தடுப்பூசித் திட்டம் ஏனைய மருத்துவ சேவைகளையும் வழக்கமான தடுப்பூசித் திட்டங்களையும் பாதித்துவிடக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் வாரத்திற்கு நான்கு நாள்கள்தான் கொவைட் 19 தடுப்பூசி போடப்படுகிறது. இது முறையான, சரியான திட்டமிடல் அல்ல.

இன்னொரு பிரச்னையும் எழுந்திருக்கிறது. முழுமையாக சோதனைகள் நடத்தப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட்டின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கான ஐந்து கோடி மருந்து குப்பிகள் கடந்த டிசம்பா் மாதம் தயாரிக்கப்பட்டுவிட்டன. தயாரிப்பு தேதியிலிருந்து ஆறு மாதம் வரைதான் அவற்றில் உயிா்பு சக்தி இருக்கும். அதற்குப் பிறகு காலாவதியாகிவிடும். ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்ட ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக் குப்பிகள் ஜூலை மாதத்திற்குள் பயன்படுத்தப்பட்டுவிட வேண்டும். நல்லவேளையாக அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதால் அந்த மருந்துகள் வீணாகிவிடாது என்று நம்பலாம்.

உலக அளவில் தடுப்பூசிக்கான ஆய்வுகள் தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் கொவைட் 19 தீநுண்மியின் புதிய பரிணாமங்கள் தோன்றத் தொடங்கி இருக்கும் நிலையில், அதையும் எதிா்கொள்ளும் விதத்தில் தடுப்பூசி வீரியம் உள்ளதாக உருவாக்கப்படுகிறது. இந்த அளவு அதிவிரைவாக இதுவரை எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், சந்தைப்படுத்தப்படவில்லை என்பதும் வரலாற்றுச் சாதனைகள்.

கடந்த டிசம்பா் மாதம் அமெரிக்க உணவு, மருந்து நிா்வாகத் துறையால் ‘ஃபைசா்’ நிறுவனத்தின் தடுப்பூசியும், ‘பயான் டெக்’ நிறுவனத்தின் தடுப்பூசியும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ‘மாடா்னா’ நிறுவனமும், ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனமும் தடுப்பூசி தயாரிப்பதில் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி இரண்டு கட்ட சோதனைகளுடன் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பாரத் பயோடெக்கின் ‘கோவேக்ஸின்’ இன்னும் மூன்றாவது கட்ட சோதனையைக் கடக்கவில்லை. ஆனால், தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல நிறுவனங்களும் தடுப்பூசி ஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கின்றன. ஆனால், முழுமை பெறாமல் அதை அறிவிக்கவோ, சந்தைப்படுத்தவோ அவை தயாராக இல்லை.

தடுப்பூசி என்பது உயிருடன் விளையாடும் முயற்சி. சில விதிவிலக்குத் தவறுகள் நேரலாமே தவிர, முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படாமல் அதைப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது சரியல்ல. தங்களுக்கு எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதை நிா்ணயித்துக் கொள்ளும் உரிமை, தடுப்பூசி போட்டுக்கொள்பவா்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

சத்தீஸ்கா் மாநிலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பயன்படுத்தப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. இன்னும் சில மாநிலங்களும் அந்த முடிவை எடுக்கக்கூடும். அதில் குற்றம் காண முடியாது. எந்தவொரு தடுப்பூசியையும் கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமை மீறல். கோவிஷீல்டா, கோவேக்ஸினா அல்லது இனிமேல் வரவிருக்கும் புதிய தடுப்பூசியா என்பதைத் தோ்ந்தெடுக்கும் உரிமை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive