சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை விரைவாக வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. ஜூலை 15-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா, பிஹார், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை இதுவரை வெளியாகவில்லை. அட்டவணையை விரைவாக வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மாணவர்கள் கூறும்போது, ''பொதுத் தேர்வுக்கு இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது. பிற மாநிலங்களில் தேர்வுஅட்டவணை வெளியிடப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். இன்னும் சிபிஎஸ்இ தரப்பில் அட்டவணை வெளியிடப்படாதது எங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மத்தியக் கல்வி அமைச்சகம் இதற்கு விரைவாகத் தீர்வுகாண வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மாணவர்கள் சமூக வலைதளங்களில் முன்வைத்த தொடர்ச்சியான வேண்டுகோள்களை ஏற்று, பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...