கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், 2020 மார்ச் முதல், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. நிலைமை சீராகி வருவதால், கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிச., 2 முதல் வகுப்புகள் துவங்கின.
ஆனால், பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. பள்ளிகளை திறக்காவிட்டால், மாணவர்களின் எதிர்காலம் மோசமாக பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. இதையடுத்து, பொங்கல் விடுமுறைக்கு பின், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, பள்ளிகளை திறக்கலாம் என, பரிசீலனை செய்யப்பட்டது.
அவசியம்
இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், நேற்று மாலை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதன் விபரம்:
தமிழக அரசின் உத்தரவுப்படி, பள்ளிகளை திறப்பது குறித்து, நவ., 16ல், பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு, பள்ளி திறப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வி நலன் கருதி, அவர்கள் பொது தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக, மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அவசியம்.
எனவே, பள்ளியை திறந்து மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டியது, இன்றியமையாதது ஆகும். பொங்கல் விடுமுறை முடிந்த பின், அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி, பள்ளிகளை திறப்பது குறித்து, வரும், 8ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்.
இதற்கு, தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதலை, முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள், கருத்து கேட்பு அறிக்கையை, சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்ப வேண்டும்.கருத்து கேட்பு கூட்டத்தின் கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறப்பது குறித்து, அரசு முடிவெடுக்கும். எனவே, எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல், கூட்டத்தை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாரம் 6 நாட்கள்
பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய, வழிகாட்டு நெறிமுறைகளையும், பள்ளி கல்வி துறை, நேற்று வெளியிட்டது.அதில் கூறியிருப்பதாவது:வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சம், 25 மாணவர்கள் மட்டும் இருக்குமாறு, பல்வேறு குழுக்களாக பிரித்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பினால், அனுமதிக்க வேண்டும். தனியார் பள்ளிகள், பள்ளி கல்வி அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று, பள்ளிகளை திறக்க வேண்டும்.பள்ளிகளுக்கு வர, பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் அவசியம். வருகைப்பதிவை கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சுகாதாரத் துறை வழியே, 'வைட்டமின்' மற்றும் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படும். 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவை, தற்போது பயன்படுத்த வேண்டாம். பள்ளி வளாகத்தை, கொரோனா தொற்று தடுப்பு முறைப்படி, 'சானிடைசர்' பயன்படுத்தி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அவசர உதவி, மருத்துவ உதவி, அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் தொலைபேசி எண் மற்றும் விபரங்களை, பள்ளிகளில் பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.
மரத்தடி வகுப்பு!
பள்ளி வளாகங்களுக்குள் மாணவர்கள் வரவும், வெளியேறவும், ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்களை ஏற்பாடு செய்ய வேண்டும். வானிலை சரியாக இருந்தால், திறந்தவெளியில், மரத்தடிகளில் வகுப்புகளை நடத்தலாம்.விளையாட்டு, என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., போன்ற நடவடிக்கைகளுக்கு, தற்போது அனுமதியில்லை. விளையாட்டு, மைதானங்களில், கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடும் வாய்ப்பிருந்தால், அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
11th ku school reopen illaya
ReplyDeleteOpen after vaccination it's not safe
ReplyDeleteDon't open now ,vaccine first ,school reopen next
ReplyDelete