சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், மதுக்கடைகள் என, அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளை திறக்காததால், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வியில் பின்தங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 24 முதல், நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின், படிப்படியாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, ஜூலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் முதல் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட, அனைத்து வகை வணிக மற்றும் சேவைகளுக்கும், மத்திய அரசு அனுமதி அளித்தது.இதைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் விமரிசையாக கொண்டாடப்பட்டன.பஸ்கள், ரயில்கள் முழுமையான இருக்கைகளுடன் இயக்கப்படுகின்றன. தியேட்டர்கள், மதுக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றிலும், மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பல மாநிலங்களில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு, கற்பித்தல் பணி துவங்கி விட்டது. பயிற்சி மையங்கள், டியூஷன் மையங்கள் இயங்குகின்றன. இவற்றையும் தாண்டி, டாஸ்மாக் பார்கள், தியேட்டர்கள், கிளப்கள் போன்றவையும் திறக்கப்பட்டு விட்டன.
அவற்றில் கூட்டம் குவிந்து வருகிறது. கொரோனாவின் எந்த விதிகளும், இந்த இடங்களில் பின்பற்றப்படுவதில்லை.இந்நிலையில், பள்ளிகளை மட்டும் திறக்காமல், தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. அதனால், மாணவர்களும், பெற்றோரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.சிறுவர், சிறுமியர் முதல் டீன் ஏஜ் மாணவ - மாணவியர் வரை பள்ளிகள் திறக்கப்படாததால், மனதளவில் பாதிக்கப்பட்டு, நேரத்தை போக்க மொபைல் போன் விளையாட்டுகளுக்கு அடிமைகளாகி விட்டனர்.பல மாணவர்கள் படிப்பின் மீது அக்கறையின்றி, தங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றி, கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். சில குடும்பத்தினர் வறுமை காரணமாக, தங்கள் பிள்ளைகளை பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே, வேலைக்கு அனுப்பி விட்டனர். இப்படி, தமிழகத்தின் அடுத்த தலைமுறையான மாணவர்களின் எதிர்காலம், மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி பள்ளிகளை திறக்கவில்லை என்று அரசு கூறினாலும், மாணவர்களும், பெற்றோரும், வெளியே சுற்றுவதற்கான அனைத்து வழிகளையும் அரசு திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளை மட்டும் திறக்காமல் காலம் தாழ்த்துவது, தமிழகத்தின் இளைய தலைமுறையினரை, கல்வியில் பின்தங்கியவர்களாகவும், கூலி தொழிலாளர்களாகவும் மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, பள்ளிகளை திறப்பது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளும், அரசும் உரிய நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இன்னும் காலதாமதம் செய்வது, அரசின் மீதான மக்களின் கோபம் அதிகரித்து, அது, வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் சூழல் உருவாகும் என, கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...