கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9 மாதங்கள் கடந்த நிலையிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கருதியது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களான புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளை திறந்து 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்தலாம் என்று அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக பெற்றோரிடம் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 12,500 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க சில பள்ளிகளில் அச்சிட்ட படிவங்கள் வழங்கப்பட்டன. சில பள்ளிகளில் பெற்றோரிடம் கோரிக்கை கடிதங்களாக பெறப்பட்டன. சில பள்ளிகளில் பள்ளிகள் திறக்கலாம், வேண்டாம் என்பதை மட்டும் எழுதிக் கொடுக்கும் படி கேட்டு வாங்கினர்.
இந்த கருத்து கேட்பில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளை 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பெற்றோர்கள் வழங்கிய கருத்துகளை பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தனர். அதன்மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த அறிக்கை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை பரிசீலனை செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த 12ம் தேதி அறிவித்தார். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டும் இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க வேண்டும். பள்ளி வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் (19ம் தேதி) முதல் திறக்கப்பட உள்ளது. வழக்கமாக வகுப்பறையில் குறைந்தது 40 முதல் 50 மாணவர்கள் வரை இருப்பார்கள். இதனால் 25 பேர் மட்டும் அமரும் வகையில் இந்த வகுப்பறைகளை 2ஆக பிரிக்கும் பணி அனைத்து பள்ளிகளிலும் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சத்து மாத்திரைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்குள் செல்லும் முன் மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். மேலும் கைகளில் கிருமி நாசினியும் வழங்கப்படும். இடைவேளை மற்றும் உணவு வேளை நேரத்தில் மாணவ, மாணவிகள் கூட்டமாக சேர்ந்து நிற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் வெப்ப நிலை 100 டிகிரிக்கு மேலோ அல்லது காய்ச்சலோ இருந்தால் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மற்றும் விதிமுறைகள் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் பொருந்தும். தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து வருகின்றன. 9 மாதங்களுக்கு பிறகு மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...