தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதையொட்டி அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக்குலேசன், சி.பி. எஸ்.இ. அனைத்து பள்ளிகளும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு வகுப்பில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஒரு தொகுதிக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால், கூடுதல் இருக்கைகளை அமைக்க வேண்டும்.
2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்று கொடுக்கப்படலாம். அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:-
பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பாதுகாப்பை அனைத்து பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தினமும் தெளிக்கப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் மாணவர்களின் வெப்ப நிலை அறிய வேண்டும். பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், கிருமி நாசினிகள், சோப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். ஆசிரியர், மாணவர் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக்கிற்கு பதிலாக தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித்திரிய அனுமதிக்கக்கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் போதும், புறப்படும் நேரத்திலும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
கூட்ட நெரிசலுக்கு வழி வகுக்கும் இறைவணக்க கூடம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பாட வேளைக்கு அனுமதிக்கக் கூடாது. என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. நடவடிக்கைகள் அனுமதிக்க வேண்டாம்.
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் முதல் நடவடிக்கையாக மாணவர்கள், பணியாளர்களை பற்றிய சுகாதார விளக்க குறிப்பு தயாரிக்க வேண்டும். அவர்களின் உடல்நிலை குறித்த சுயவிவர படிவத்தினை சேகரிக்க வேண்டும்.
ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் தேவையான சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அவர்களை பரிந்துரைக்கலாம். உடல் நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்கள் எந்த ஒரு தூய்மை செய்யும் பணிகளிலும் ஈடுபடக்கூடாது.
குளிர்சாதனங்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள்ளோ நுழைவு வாயில் அல்லது வெளியேறும் வழி அருகிலோ உணவு பொருட்களை விற்க வெளிவிற்பனையாளர்களை அனுமதிக்கக்கூடாது. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் முக கவசம் அணிய வேண்டும்.
மாணவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியே பின்பற்றி சிறிய குழுக்களாக ஆய்வகங்களில் செய்முறை சோதனைகள் செய்ய வேண்டும்.
வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு இடைவேளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு இடையே உணவு பகிர அனுமதிக்கக்கூடாது.
பள்ளி மற்றும் விடுதியில் ஒரு நபர் நோய் தொற்றுடன் கண்டறியப்பட்டால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு மேல் நடவடிக்கைக்கு சுகாதார அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...