நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்துதமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள், சாய்தளம் அமைக்கும் பணிகள் ரூ.46கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன. இதனிடையே இதுதொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தன. அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து தர வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்யும் பணியை தமிழக பொதுப்பணித் துறை மேற்கொண்டது. அத்துடன்நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்போது புதிதாக கட்டப்படும் வகுப்பறைகள், ஆய்வகங்களுடன் தண்ணீர் வசதியுடன்கூடிய கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள், சாய்தளம் போன்றவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கெனவே உள்ள (10 ஆண்டுகள் பழமையானவை) அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளில் அந்த வசதியை ஏற்படுத்தித் தர முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக பொதுப்பணித் துறை நபார்டு கடனுதவி மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன்கூடிய கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை, சாய்தளம் ஆகியன அமைக்கப்படுகின்றன. 2019-20-ல்ரூ.17 கோடியே 38 லட்சத்தில் 192 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு இதுவரை 105 பணிகள் முடிவடைந்துள்ளன. 2020-21-ல் 574 பள்ளிகளில் மாணவர்களுக்கு 303 கழிப்பறைகளும், மாணவியருக்கு 271 கழிப்பறைகளும் கட்டும் பணிகள் ரூ.29 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்துப் பணிகளும் 6 மாதத்துக்குள் முடிக்கப்படும். அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...