அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் சிறந்த நபரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த குழந்தையை அறிவித்துள்ளது. அந்தக் கௌரவத்தைப் பெற்றவர் இந்திய அமெரிக்கச் சிறுமி கீதாஞ்சலி. கொலராடோ மாகாணத்தின் லோன் ட்ரீ பகுதியில் வசித்துவரும் இவர் ஒரு சிறார் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளரும்கூட.
அமெரிக்கா முழுவதும் 8 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 5,000 குழந்தைகளில் இருந்து ஐந்து குழந்தைகள் பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் கீதாஞ்சலி ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வாகி இருக்கிறார்.
1927-ம் ஆண்டிலிருந்து ஆண்டின் சிறந்த நபரை டைம் இதழ் அறிவித்துவருகிறது. 2019-ம் ஆண்டின் சிறந்த நபராக காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் 16 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த முறை சிறந்த குழந்தை எனும் கௌரவம் உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் கண்டுபிடிப்பாளர்
உலகிலுள்ள மற்ற குழந்தைகளைப் போல் கீதாஞ்சலியும் இணையவழி வகுப்புகளில் பங்கெடுத்துவருகிறார். அதற்கிடையே அறிவியல் தொழில்நுட்பத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்றும் சிந்திக்கிறார்.
அவர் கண்டறிந்த கருவி மூலம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரீயம், குடிநீரில் கலந்திருப்பதைக் கண்டறிய முடியும். கார்பன் நுண்குழாய்கள் மூலம் குடிநீரில் இருக்கும் காரீயத்தை இந்தக் கருவி கண்டறிகிறது. Tethys என்று இந்தக் கருவிக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார். இது தொழில்முறையில் தயாரிக்கப்பட்டு பரவலான பயன்பாட்டுக்கு வர நாளாகும்.
வலிநிவாரண மருந்துகளுக்குச் சிலர் அடிமையாவதை மரபணுப் பொறியியல் அடிப்படையில் முன்கூட்டியே கண்டறிவதற்கான கருவியையும் செயற்கை நுண்ணறிவு மூலம் இணைய மிரட்டலைக் கண்டறியும் இணையநுட்பத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.
இப்படிப் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ள கீதாஞ்சலி ஒரு பியானோ இசைக்கலைஞரும்கூட. சுற்றுச்சூழல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்க அதிபரின் இளையோர் சுற்றுச்சூழல் விருதை ஏற்கெனவே அவர் பெற்றுள்ளார்.
அடுத்த கனவு
“அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். நமக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும். அது எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி.
எதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும், அறிவைத் தூண்டிச் சிந்திக்க வேண்டும், ஆராய வேண்டும், புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும், அது குறித்து உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய அறிவியல் தாரக மந்திரம்.
என்னால் ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றால், எல்லோராலும் சிறப்பாக வேறு பல விஷயங்களைச் செய்ய முடியும்” என்று உறுதிபடக் கூறுகிறார் கீதாஞ்சலி.
அவருக்கு மிகப் பெரிய கனவு ஒன்றும் உள்ளது. உலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான உலகக் குழுவை உருவாக்கும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டுவருகிறார். அந்த நோக்கத்தை எட்டுவதற்கு அவரை வாழத்துங்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...