சிறுபான்மையின எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நிதி பெறுவதற்கான தகுதிகளில் மாற்றம் செய்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முழுநேரமாக எம்.ஃபில்., பிஎச்.டி. படிக்கும் சிறுபான்மைப் பிரிவு ஆய்வாளர்களுக்கு, மத்திய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக மவுலானா ஆஸாத் தேசிய ஆராய்ச்சி நிதியுதவித் திட்டத்தின்கீழ், நிதியுதவி அளித்து வருகிறது.
இதுவரை சிறுபான்மை ஆய்வாளர்கள் நிதியுதவி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தகுதிகளில், மத்திய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் பரிந்துரையின் படி, யுஜிசி சில மாற்றங்களைச் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“யுஜிசி-நெட்- ஜேஆர்எஃப்., சிஎஸ்ஐஆர்-நெட்- ஜேஆர்எஃப். தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர்ந்து எம்.ஃபில்., பிஎச்.டி. ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில், சிறுபான்மைப் பிரிவு ஆய்வாளர்கள் மவுலானா ஆஸாத் தேசிய ஆராய்ச்சி நிதியுதவித் திட்டத்தின் கீழ், நிதியுதவி பெறத் தேர்வு செய்யப்படுவார்கள்.
யுஜிசி- நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) கடந்த டிச.1-ம் தேதி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தகுதித்தேர்வு எழுதியவர்கள், நிதியுதவி பெறுவதற்குரிய தகுதியை அதில் சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான மின் சான்றிதழ் https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் தங்களுடைய தேர்வு எண்ணைப் பயன்படுத்தி, நிதியுதவி பெறுவதற்கான திட்டம் குறித்த விவரங்கள், விதிமுறைகள் போன்றவற்றைச் சான்றிதழில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆராய்ச்சி நிதியானது யுஜிசி-நெட்-ஜேஆர்எஃப்., சிஎஸ்ஐஆர்-நெட்-ஜேஆர்எஃப் தேர்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஏற்கெனவே எம்ஃபில்., பிஎச்.டி. ஆய்வு மேற்கொண்டு வருபவர்கள் எனில், அவர்கள் பதிவு செய்த நாள் மற்றும் தேர்வு முடிவு வெளியான நாள், இவற்றில் எது சமீபத்திய நாளோ, அந்த தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதேபோல் எம்ஃபில்., பிஎச்.டி. ஆய்வு மேற்கொண்டு வருபவர்கள் 3 மாதங்களுக்குள் நிதியுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
சேர்க்கை அறிக்கை, மாதாந்திர அறிக்கை போன்றவற்றை, யுஜிசி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் நெறியாளர், துறைத்தலைவர் மற்றும் கல்வி நிறுவனத் தலைவரின் கையொப்பம் பெற்று, அந்தந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள நிதியுதவிப் பொறுப்பாளர்கள் மூலமாக யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆராய்ச்சி நிதியானது மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.”
இவ்வாறு யுஜிசி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...