ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி பாராட்டினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாணவர்,மாணவியர் கலைத் திறனை ஊக்குவிக்கவும் ,நமது பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைவடிவங்களை மீட்டெடுத்து உயிர்ப்போடு வைத்திருக்கவும் ,மாணவர்களைக் கொண்டு இக்கலைகளை வளர்த்தெடுக்கவும் கலா உத்சவ் எனும் போட்டி பள்ளி,மாவட்ட,மாநில மற்றும் தேசிய அளவில் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பள்ளி,மாவட்ட,மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் ஆன்லைன் முறையில் நேரலையாக நடத்தப்பட்டது.
இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் மாநில அளவில் முதல்,மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றனர்.எனவே அவர்களுக்கான பாராட்டு விழா முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவில் ஓவியப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ஹரி ராஜ்,சுடுமண் பொம்மை செய்தலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் டி.பிரகாஷ், சாஸ்திரிய நடனம் (கிளாசிக் நாட்டியத்தில்) மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ.பாபு ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் வருவாய் கோட்டாசியர் தண்டாயுதபாணி,துணை ஆட்சியர் (பயிற்சி) சுகிதா, புதுக்கோட்டை தாசில்தார் முருகப்பன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி( மேல்நிலை) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை) ஜீவானந்தம்,(உயர்நிலை) கபிலன்,கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன்,இராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ஹரி ராஜ் தேசிய அளவில் நடைபெறும் கலா உத்சவ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...