பொறியியல் மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏஐசிடிஇ வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., உள்ளிட்ட தொழில்துறைப் படிப்புகளையும் டிப்ளமோ படிப்பையும் படிக்கும் மாணவிகளுக்கான பிரகதி உதவித்தொகை ஏஐசிடிஇயால் வழங்கப்படுகிறது. இதேபோன்று படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சாக்ஷம் உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோன்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் சாக்ஷம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல டிப்ளமோ மாணவிகளும் இரண்டு உதவித் தொகைகளுக்கும் தகுதியானவர்கள் ஆவர். ஏற்கெனவே இந்த உதவித்தொகையைப் பெற்று வருபவர்கள், அடுத்த ஆண்டுக்குப் பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களுக்குக்கூட பிரகதி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இரண்டு உதவித்தொகை திட்டங்களின் கீழ் ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வரை தேர்வான மாணவர்களுக்கு வழங்கப்படும். ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction
கூடுதல் விவரங்களுக்கு: scholarships.gov.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...