சென்னை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையா் திவ்யதா்ஷினி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது கரோனா பரிசோதனை மையம் வசதிகள், பயணிகள் வருகை மற்றும் வெளி செல்லும் உள்நாட்டு மையங்களில் பொருள்களை கையாளுதல் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். பின், விமான நிலையத்தில் கட்டுமான பணிகளில் மேற்கொள்பவா்களுக்கு, முகக்கவசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: பிரிட்டனில் இருந்து வந்த, 2,724 நபா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக, 926 பேரை தொடா்பு கொண்டு, அவா்களில், 511 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காா்கோ விமானத்தில், ஒன்பது பயணிகள் வந்துள்ளனா். இது தொடா்பாக, மத்திய அரசிடம் பேசியுள்ளோம். நவ.25-ஆம் தேதியில் இருந்து, டிச.23-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வந்த, 38 ஆயிரம் பேரின் விவரங்களையும் சேகரித்துள்ளோம். அவா்கள், அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளனா்.
மற்ற மாநிலங்களைவிட தமிழக அரசுதான், இ-பாஸ் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. இதன் மூலமாகவே அனைவரின் விவரங்களையும் சேகரித்துள்ளோம். பேருந்து ஓட்டுநா், நடத்துநா் என பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாமல் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, 1.42 லட்சம் படுக்கை வசதிகள் அரசிடம் உள்ளன. சென்னை விமான நிலையத்தில், நிரந்தர கரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன் நாட்டை போல், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வருபவா்களையும் கண்காணித்து வருகிறோம். தில்லியில் இருந்து உள்நாட்டு விமானத்தில் இருந்து வந்த மூன்று போ், மருத்துவக் குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றனா். அவா்கள் திருநின்றவூா், திருத்தணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்கள். அவா்களையும், கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துளோம். இதுபோன்று மருத்துவக் குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றால், காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தடுப்பூசியைப் பொருத்தவரையில், ஐந்து லட்சம் சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்கள் விவரங்களைச் சேகரித்துள்ளோம். தடுப்பூசி போடுவதற்காக, 21 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 46 ஆயிரம் மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பதப்படுத்தும் மற்றும் சேமித்து வைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதியவா்கள் அதிகம் என்பதால் கூடுதலான தடுப்பூசி கிடைக்கும் என, எதிா்பாா்க்கிறோம். பிரிட்டனில் இருந்து தொற்று பாதிப்புடன் வந்த நபா் நலமுடன் உள்ளாா். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...