இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ முறை மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. இதுதவிர்த்து 20 தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 20 தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்நிலையில், இந்திய மருத்துவ முறைப் படிப்புகளான சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், சுகாதாரத் துறை இணையதளத்தில் கடந்த 13-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் இன்று (30-ம் தேதி) மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என்று இந்திய மருத்துவ முறைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைத் தேர்வுக்குழுச் செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...