சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை மற்றும் நூலகத் துறையிலிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 25 பேர், 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவலுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களுக்கான (3 ஆண்டு) ஒப்பந்தக் காலம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அவர்களுக்குப் பணிப் புதுப்பிப்பு ஆணையோ அல்லது பல்கலைக்கழகத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கான ஆணையோ வழங்கவில்லை. எனவே, இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பணிநிரவல் ஆசிரியர்கள் 25 பேர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நிரவலுக்குச் சென்ற எங்களுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை, பணி முன்னறிவுத் திட்டம் மற்றும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை இன்னும் அமல்படுத்தவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு வாங்கிய சம்பளத்தை இன்றும் வாங்கி வருகிறோம். எனவே அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருவதாகக் கூறினர்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் 3 ஆண்டு பணிக் காலம் முடிந்தவர்களுக்குச் சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...