மாரிமுத்து பேசறேனுங்க.
மானாவாரிப் பூமி நாலு ஏக்கரும்,
மாடு கன்னு ஏழெட்டும்
நான் பெத்த மக்க
இரண்டு பேரும் தான்
என் சொத்து.
பெத்த ரெண்டு மக்கள்ல
ஒன்னு
என் கூட ஒத்தாசையா
காட்டுல கஷ்டப்படறான்,
ரெண்டாவது புள்ள
படிக்கனுங்கறது
மூத்தவனோட பேராசை.
பால் காசுலயே
அவனை படிக்க வச்சிட்டிருக்கோம்.
பெருசா படிக்காட்டியும்
குறை சொல்லாத அளவு
படிச்சிட்டு இருக்கான்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கையில தான்
கொரோனானு சொல்லி
லீவு விட்டாங்க.
வயக்காட்டு வேலையும்,
மாடு கன்னு பார்க்கிறதும் தான்
அவனுக்கும் பழகிடுச்சு.
ஆன்லைன் கிளாஸ்னு சொல்லி
அஞ்சாயிரம் ரூபாய்க்கு
போன் வாங்கியும்
பெருசா புரியலன்னு
பார்க்கிறத விட்டுட்டான்,
நேத்தக்கி டீச்சரு
போன் பண்ணி
ஸ்கூலுக்கு வரச் சொல்றாங்க,
ஸ்கூல் தொறக்கறதப் பத்தி
நான் சொல்லனுமாமாம்.
எங்கூருக்கு பஸ் வந்து
மாசம் எட்டாச்சு,
ஐம்பது ரூபாய்க்கு
பெட்ரோல் போட்டுட்டு போகனும்.
ஊரு உலகமே பயந்துக்கற
கொரோனாவைப் பத்தி
எனக்கென்ன தெரியும்?
மாடு கன்னைப் பத்திக்
கேட்டா
மணிக்கணக்கா பேசுவேன்.
கொள்ளை நோயப்பத்தி
நான் என்ன சொல்ல?
ஸ்கூலு தொறக்கச் சொல்லி
மக்களுக்கு நோய் வந்தா
நான் என்ன பண்ண?
தொறக்க வேணாம்னு
சொன்னா
படிக்கிறதுக்கு என்ன பண்ண?
படிச்சவங்க,
டாக்டருக,
கலெக்டருக,
மந்திரிகளுக்கு தெரியாததா
இந்த
மாரிமுத்துக்கு தெரியப்போகுது?
கருத்துக் கேட்கறேனு சொல்லி,
எங்களை மாட்டி விடாதீங்க,
எதுவா இருந்தாலும்
நல்ல முடிவ எடுங்க,
கிராமத்து மனுஷங்களுக்கு
நல்லது பண்ணுங்க...
*மாரிமுத்து*
*மரம்புடுங்கிக் கவுண்டனூர்*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...