தர்மபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரிஷாலி; பிளஸ் 2 தேர்வில், 500க்கு, 469 மதிப்பெண்கள் எடுத்தார். இயற்பியல் 91; உயிரியல் 100; வேதியியல் 95; 'இன்பர்மேட்டிக்ஸ் பிராக்டீஸ்' எனப்படும், தகவல் தொழில்நுட்ப செயல் முறையில் 95 என, மதிப்பெண்கள் பெற்றார்.
பரிசீலிக்கவில்லை
பி.எஸ்.சி., வேளாண் படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்தார். வேளாண் பல்கலை வெளியிட்ட தரவரிசை பட்டியலில், திரிஷாலி இடம் பெறவில்லை.
இதையடுத்து,
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில்
திரிஷாலி வழக்கு தொடுத்தார்.வேளாண் பல்கலை சார்பில் வழக்கறிஞர் அப்துல்
சலீம் ஆஜராகி, ''விருப்பப் பாடமாக, கணினி அறிவியல் படித்திருப்பதாக,
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்;
ஆனால், படிக்கவில்லை. திசை திருப்பும் விதத்தில் தகவல் அளித்ததால் பரிசீலிக்கவில்லை,'' என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.பிரபாகரன், ''இன்பர்மேட்டிக்ஸ் பிராக்டீஸ் எனப்படும், தகவல் தொழில்நுட்ப செயல்முறை பாடம், கணினி அறிவியல் பாடத்துக்கு இணையானது;
விண்ணப்பத்தில் அதற்கான பகுதி இல்லாததால், கணினி அறிவியல் என, குறிப்பிட்டுள்ளார்,''
என்றார்.
சி.பி.எஸ்.இ., தரப்பில், வழக்கறிஞர் நாகராஜன் ஆஜராகி, ''இன்பர்மேட்டிக்ஸ் பாடம், கணினி அறிவியலுக்கு இணையானது; இதில் உள்ள பாடத்திட்டம், கணினி அறிவியல் பாடத்துக்கு சமமானது தான்,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பிளஸ் 2 வில், இன்பர்மேட்டிக்ஸ் பாடத்தை விருப்ப பாடமாக, மாணவி தேர்ந்தெடுத்துள்ளார். பல்கலை வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேட்டில், இந்தப் பாடம் இடம் பெற்றிருக்கவில்லை.
திட்டவட்டம்
கணினி அறிவியல் பாடத்துக்கு இணையானது தான், இன்பர்மேட்டிக்ஸ் என, சி.பி.எஸ்.இ., தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் விண்ணப்பத்தில், இன்பர்மேட்டிக்ஸ் பாடம் குறித்து குறிப்பிட வசதியில்லை.
அதனால், கணினி அறிவியல் பாடத்துக்கு எதிரில், மதிப்பெண்ணை குறிப்பிட்டுள்ளார். அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள இந்த மாணவி, பல்கலையை திசை திருப்ப வேண்டிய தேவையில்லை; பொய்யான தோற்றத்தை அளிக்க வேண்டிய தேவையும் இல்லை.
இன்பர்மேட்டிக்ஸ் பாடம், கணினி அறிவியலுக்கு இணையான பாடம் தானா என்பதை அறிவதற்கான முயற்சிகளை, பல்கலை தரப்பில் எடுத்திருந்தால் முறையாக இருந்திருக்கும்.
ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் தவிர, கூடுதலாக சேர்க்க, விளக்கம் அளிக்க வாய்ப்பு இல்லை.
இதில், நடைமுறை பிரச்னைகள் உள்ளன.எனவே, இன்பர்மேட்டிக்ஸ் பாடத்தை, கணினி அறிவியல் பாடத்துக்கு இணையாக கருதி, தரவரிசை பட்டியலில் சேர்த்து, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, மனுதாரரை அனுமதிக்க வேண்டும்.
இந்த உத்தரவு, இவ்வழக்குக்கு மட்டுமே பொருந்தும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...