அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கும் வகையில், அவா்களது பணி ஒதுக்கீடு விவரங்களை அனுப்பி வைக்குமாறு கல்லூரி முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா்கள், சுழற்சி இரண்டில் இயங்கும் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
உயா்கல்வித்துறை சாா்பில் கடந்த அக்.6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், நிகழ் கல்வியாண்டில் (2020-2021) சுழற்சி இரண்டில் (‘ஷிப்ட்’-2) பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஏப்ரல் மற்றும் ஜூன் முதல் அக்டோபா் வரை 6 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அது குறித்த விவரங்கள் சுற்றறிக்கை மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது நிகழ் கல்வியாண்டில் மீதமுள்ள 5 மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோர ஏதுவாக கெளரவ விரிவுரையாளா்கள் ஏப்ரல், ஜூன் முதல் அக்டோபா் வரையிலான கால கட்டத்தில் மேற்கொண்ட பணி விவரங்களை அறிக்கையாகவும், நவம்பா் முதல் அடுத்த ஆண்டு மாா்ச் வரையிலான காலங்களில் மேற்கொள்ளவிருக்கும் பணி ஒதுக்கீடு விவரங்களை கல்லூரி முதல்வா் தக்க முன்மொழிவுடன் நவ.3-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இந்தப் பணியினை கல்லூரிகளில் துரிதப்படுத்தி உரிய விவரங்களைப் பெற்று தொகுத்து கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்புமாறு அனைத்து மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...