Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்!

598303

பெற்றோரிடம் கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு  இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''9-ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து, நவம்பர் 9 அன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது உள்ள நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டி உள்ளது.

ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளியில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா? அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா? தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த் தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

பண்டிகைக் காலங்களில் கடைகளுக்குச் செல்பவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இயலவில்லை. பெரும் எண்ணிக்கையில் மக்கள் பண்டிகைக்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிப் பண்டிகை தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம், குறிப்பாக இவ்வாண்டு, அமாவாசை அன்று தீபாவளி வருவதால், அசைவம் சாப்பிடுபவர்கள் பண்டிகை விருந்தை அடுத்த நாள் கடைப்பிடிப்பார்கள், அவ்வாறு இருக்கும் போது, நவம்பர் 14 தீபாவளி, நவம்பர் 15 ஞாயிறு அதற்கு அடுத்த நாள் பள்ளித் திறப்பு என்பது, எந்தவித முன்யோசனையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே உள்ளது‌.

கடந்த சில நாட்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பண்டிகைக் காலத்தில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்து வருகின்றனர். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வியாபார நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடுவதை ஊடகங்களில் வரும் படங்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16 அன்று நேரடியாகப் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் நோய்த் தொற்றுக்குக் காரணமாக மாட்டார்களா? நோய்த் தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த் தொற்றுப் பரவ காரணமாக மாட்டார்களா?


மருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்கள்தான் உரிய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்குப் பெற்றோரிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

சுகாதாரத் துறைக்குப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் காக்கும் பொறுப்பு உள்ளது. சுகாதாரத் துறை இயக்ககம் பள்ளிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு திறப்பது பாதுகாப்பானதா? என்ற சுகாதார அறிக்கையை வெளியிட வேண்டும்.

பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், எந்தவித அடிப்படை ஆய்வும் மேற்கொள்ள வாய்ப்பில்லாத, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர்-ஆசிரியர் கருத்துகளை மட்டும் பெற்று, பள்ளிகள் திறக்கப்படுவது பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.

பண்டிகைக் காலம் முடிந்த பிறகு, நோய்த்தொற்றுத் தன்மை எவ்வாறு உருவெடுத்துள்ளது என்று கவனித்து, பள்ளிகள் திறப்பு குறித்துச் சுகாதாரத் துறையின் மருத்துவக் குழு உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய‌ ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையை முன்வைத்து மாணவர், பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்டு அதன் பிறகுதான் பள்ளிகள் திறப்பு  குறித்து அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு எந்த ஆய்வும் இல்லாமல், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர்- ஆசிரியர் கருத்தின் அடிப்படையில் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதித்தால் இத்தனை நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பயனற்றதாகி விடுவதோடு, மிகப் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும். அத்தகைய சூழலுக்கு யார் பொறுப்பேற்பது?

2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் பாதிப்பைக் கருத்தில் எடுத்து பாடத்திட்டத்தைக் குறைத்து வகுப்பு வாரியாகக் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது‌.

பாடத்தைக் குறைப்பது, பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அக்குழு அறிக்கை தந்ததா? இல்லையா? என்ற தகவல்கூட இதுவரை வெளியாகவில்லை. பாடத்திட்டம் குறைக்கப்படுமா? குறைப்படாதா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகள் திறக்கச் சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும்.

இக்கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பைப் பள்ளித் திறப்பிற்கு முன்பாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.சுகாதாரப் பேரிடரை உணர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. எனவே பேரிடரின் தன்மையைச் சுகாதாரத் துறைதான் கணிக்க முடியும். தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்புக் குறித்து அவசரம் காட்டாமல் மருத்துவ ஆலோசனைப் படி, பொதுச் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்புக் குறித்துப் பொதுமக்கள் கருத்துக் கேட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது''.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு  தெரிவித்துள்ளார்.





1 Comments:

  1. 12 th student ku mattum school open sollirruka yenu enga uyrie mukiyam illaya avaga mattum athan mukiyama onnum avaga open panni school pogaum avga illa ellarum 12 th student pogakuthu avgakum closed sollunga please chief mister please read this comment please
    by
    faithufully students in 12

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive