தமிழகத்தில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் 9இல் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டு உள்ள பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பயின்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை ஒட்டி, தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் இருப்பதால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை அடுத்த வருட ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை முடிந்து தொடங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். சுமார் 12 ஆயிரம் பள்ளிகளில் நடைபெற்ற கூட்டத்தில் 45 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க பரிசீலித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இருப்பினும் கொரோனா வைரஸின் 2வது அலை, மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் எளிதில் நோய் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது பெற்றோரை அச்சப்பட வைத்துள்ளது. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டது நாம் அறிந்ததே. இதனால் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுத்தேர்விற்கு தயாராவதில் சிக்கல், ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு நோய் பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள பெற்றோர் 70% பேர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயாராக உள்ளனர். இருப்பினும் அரசு இது குறித்து தீர ஆலோசித்து வரும் 12ம் தேதி இறுதி முடிவை வெளியிட உள்ளது.
No
ReplyDelete