மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (நவ.16) வெளியாகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கின.
அதன்படி, இணையதள முகவரிகளில் மாணவா்கள் விண்ணப்பங்களை கடந்த வியாழக்கிழமை (நவ.12) வரை சமா்ப்பித்தனா். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமாா் 25,000 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,000 பேரும் விண்ணப்பித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்ணப்பங்களைப் பரிசீலனைக்குட்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அதனை வெளியிடுகிறாா்.
அடுத்த ஓரிரு நாட்களில் கலந்தாய்வு தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் படிக்க 395 அரசு பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த நாள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...