தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முழுக்க முழுக்கப் பள்ளி மாணவர்களைக் கொண்டு இணையதளம் மூலமாக ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எழுத்தாளர் மற்றும் ஆசிரியரான ஆதலையூர் சூரியகுமார்.
திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்றம் சார்பாக நடைபெறும் இந்தப் பட்டிமன்றத்தை அப்பள்ளியின் ஆசிரியரான ஆதலையூர் சூரியகுமாரே நடுவராக இருந்து நெறிப்படுத்துகிறார்.
இந்தத் தீபாவளியின்போது அழிக்கப்பட வேண்டியது நரகாசுரனா... கரோனாசுரனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இணைய வழியில் நடக்கிறது.
கரோனாசுரனே என்ற அணியில், மதுரை, எம்.சி. மாநகராட்சிப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மாசாணம், மேலூர் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி ஸ்வேதா, கொண்டபெத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பிருந்தா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி, சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நரகாசுரனே என்ற அணியில் கும்பகோணம் பானாதுறை அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் மாருதிமாலன், சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பூரணி, சி.பி.வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி காவியா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சி குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசிய பட்டிமன்ற நடுவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ஆதலையூர் சூரியகுமார், "பள்ளி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பல மாதங்களாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுடைய திறமை அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தபட வேண்டும். அந்த வகையில் அவர்களுடைய பேச்சாற்றலை, கருத்துப் பரிமாற்றத் திறனை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கூட அளவிலும் பட்டிமன்ற அணி உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை வெளிக்கொண்டு வர முடியும். அதற்கான முன்முயற்சிதான் இது. பொதுவெளியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கும்பொழுது மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளைப் பல மடங்கு பெருக்கிக்கொள்ள முடியும்.
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என்று அனைத்து வகைப் பள்ளி மாணவர்களும் பட்டிமன்றத்தில் பங்கேற்கிறார்கள். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பரவலாக மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். கலாச்சாரப் பரிமாற்றம் நிகழும். இதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது” என்றார்.
மதுரை கிழக்கு கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தென்னவன், சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் முனீஸ்வரன், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஹரிதேவன், திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரி நூலகர் ஜெயபாரதி ஆகியோர் இந்தப் பட்டிமன்ற நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுகின்றனர். பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளரும் கட்டுரையாளருமான டாக்டர் ஞானசேகர் பரிசுகளை வழங்குகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...