Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?

chi095236

தமிழ்நாட்டில் விரைவில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களைத் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன ஆனால், கொரோனா பரவல் தொடரும் நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்த அச்சங்களும் இருக்கின்றன.


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. வழக்கமாக, ஜூன் மாதம் துவங்கும் சேர்க்கைப் பணிகளும் நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதமே துவங்கப்பட்டது.


இதற்குப் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகளைத் திறப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக அரசு மவுனம் காத்தது.


செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு தனது வழிகாட்டு நெறிமுறையில் தெரிவித்த போதும், தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


இந்நிலையில், 9ஆம் கட்ட ஊரடங்கு அறிவிப்பும் தளர்வும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பள்ளிக்கூடங்களைத் திறப்பது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிகளில் கூட்டம் நடத்தி பெற்றோரிடம் கருத்துக்களைப் பெற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் மாணவர்கள் தரப்பில் அவர்களின் பெற்றோர் பள்ளி முதல்வர்கள், தாளாளர்களிடம் தெரிவிக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு பள்ளிகள் திறப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என்று சென்னையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.


ஆனால் கருத்துக் கேட்புக்கு, பதிலாக மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.


ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததும், பல ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை மனதில் கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.


இந்த அச்சம் தவிர பள்ளிகளைத் திறப்பதில் வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் இந்த ஆண்டில் பல பள்ளி நாட்களை இழந்ததால் பாடங்களைக் குறைக்க வேண்டும். அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


எதைப் படிப்பது, ஆசிரியர்கள் எதை பாடமாக நடத்துவது என்ற குழப்பம் நீடிப்பதாகச் சொல்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பிரபாகரன்.


"தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு கடந்த மே மாதமே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும், எந்த குழப்பமும் இன்றி படிக்கின்றனர்.


தமிழ்நாட்டில், பள்ளி கல்வி ஆணையாளராக இருந்த சி.ஜி. தாமஸ் வைத்தியன் தலைமையில் குழு அமைத்து பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது.


ஆனால், அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எதைப் படிப்பது எதைத் தவிர்ப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. எனவே, பள்ளிகள் திறக்கும் முன்பாக உரிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்கிறார் அவர்.


இது தவிர, பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளும் மேம்பட வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 50 பேருக்கு ஒரு குடிநீர் குழாய், 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர், மாணவியருக்கென அதிகபட்சமாக, தலா இரு கழிப்பறைகளே உள்ளன. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தலா 10 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.


இது தவிர, பல இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. கிராமப்புற அரசுப் பள்ளிகளில், வளர் இளம் பெண்களின் நலனுக்காக, கழிப்பறைகளில், 'இன்சினரேட்டர்' பொருத்தாததால், மாதவிடாய் காலங்களில் பெரிதும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. மேலும் தற்போதைய சூழலில், அடிக்கடி கழிவறைகளை சுத்தம் செய்வது அவசியம். தூய்மைப் பணியாளர்கள் இல்லாமல் இந்தப் பணிகளை மேற்கொள்வது, இயலாத காரியம்.


தனியார் பள்ளிகள் கொடுத்த கட்டண நெருக்கடியால் இந்த ஆண்டு பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாவிடில் நடப்பாண்டில் அதிகரித்த மாணவர் சேர்க்கையை தக்கவைப்பது சவாலான காரியமாகிவிடும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive