மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து மசோதா கொண்டு வந்தது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வௌியாகின. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதனால், நடப்பு கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவும், அதுவரை நீட் முடிவை வெளியிடக் கூடாது எனவும் ஐகோர்ட் மதுரை கிளையில் இரு வழக்குகள் தாக்கலாகின.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்கவும், ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இதனால், தமிழக அரசு உள்இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனால், இந்த ஆண்டே மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் முடிவு நல்ல பலனைத் தரும். இந்தப் பலன் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டும். அரசுப் பள்ளி இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் உள்ளன. இங்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கும் உள்இடஒதுக்கீடு வழங்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அவர்களையும் சேர்க்கக் கோரி மனு செய்துள்ளோம். அதை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்றார்.
அப்போது நீதிபதிகள், முறைப்படி மனுவாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், வழக்கிற்கான பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்றனர்.இதையடுத்து, இந்த மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...