மருத்துவக் கல்லூரிகளை டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாக மீண்டும் திறக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் அனைத்து கோவிட் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாகத் திறக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஏற்கெனவெ எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாகக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். 2020- 21 ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் 2021 பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். முதலாமாண்டு முதுகலை வகுப்புகள் அதிகபட்சம் 2021 ஜூலை 1 ஆம் தேதிக்குள்ளாகத் தொடங்க வேண்டும்.
அனைத்துக் கல்லூரிகளிலும் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதேபோல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சிக்காக கோவிட் அல்லாத படுக்கைகளைப் போதிய அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும். கோவிட் அல்லாத நோயாளிகளுக்காகப் புற நோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...