குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.16) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
குமரிக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, வட தமிழகம் வரை நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.16) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதுதவிர, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.17) லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்
சென்னையில்....: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 90 மி.மீ., செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 70 மி.மீ., கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, செங்கல்பட்டில் தலா 50 மி.மீ., திருவாரூா் மாவட்டம் நன்னிலம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தலா 40 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, ராமேஸ்வரம், சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சாவூா் மாவட்டம் மஞ்சளாறு, திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...