திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் புதிய மருத்துவ கல்லுாரி கட்டட பணிகள் ஆகியவற்றை, அரசு சுகாதாரத் துறை முதன்மை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவின்படி, கொரோனா தொற்று தடுப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளில், 920; தனியார் மருத்துவமனைகளில், 846 படுக்கைகள் என, மாவட்டத்தில் மொத்தம், 1,766 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தொற்று கவனிப்பு மையங்கள், ஆறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு, அங்கு, 2,470 படுக்கை வசதிகள் உள்ளன.பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் நோய் தொற்று கட்டுக்குள் உள்ளது. நடமாடும் வாகனம் மற்றும் மருத்துவ முகாம்களில், மக்கள் தாமாக முன்வந்து, கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.திருவள்ளூரில், கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவ கல்லுாரியில், 165 கோடி ரூபாயில், படுக்கை வசதிகள், 220 கோடி ரூபாயில் கல்லுாரி, தங்கும் விடுதிகள் என, மொத்தம், 385 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகள் நடக்கின்றன.
இப்பணிகள், ஒராண்டுக்குள் நிறைவடையும்.மேலும், நடப்பாண்டில்புதிதாக, 11 மருத்துவ கல்லுாரிகள் கட்டுவதற்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்துள்ளார். அனைத்து மாவட்டத்திலும், மருத்துவ கல்லுாரிகள் உள்ள மாநிலமாக, தமிழகம் விளங்குகிறது. பொதுமக்கள், சமூக இடைவெளி கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, கூட்ட நெரிசல்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'இரண்டாம் அலைக்கு சாத்தியக்கூறு இல்லை
''தமிழகத்தில், கொரோனா பரவலில், இரண்டாம் அலைக்கான வாய்ப்பு இல்லை,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.திருத்தணியில், அரசு பொது மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை,நேற்று ஆய்வு செய்த பின், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று, இரண்டாம் அலைக்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை. இருப்பினும், தொற்று பரவுவதை முழுமையாக தடுப்பதற்கு முக கவசம், சமூக இடைவெளி அவசியம்.
இதுதவிர, அடிக்கடி கைகள் கழுவும் பழக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும். திருத்தணி நகரில், 40 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் உள்ளனர். வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், முக கவசம் அணியாமல் செல்வது வேதனைக்குரியது. கொரோனாவின் தாக்கம் குறித்து, மக்கள் இன்னும் முழுமையாக அறியாமல், அலட்சியத்துடன் செல்கின்றனர்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள், இன்னும் இரு மாதத்திற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில், இதுவரை, முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், என, மொத்தம், 11 லட்சம் பேரிடம் இருந்து, 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...