மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற விவரத்தை கல்வியியல் கல்லூரிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற தேசிய ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 50-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சிக்கான காலக்கெடுவை ஏழு ஆண்டில் இருந்து வாழ்நாளுக்கானதாக மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது ஏற்கெனவே தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அனைத்து ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:”மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தேசிய கல்வி ஆசிரியா் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளின் முதல்வா்கள், மேற்குறிப்பிட்ட தகவலை பி.எட்., எம்.எட். பயிலும் ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கு அறிவிப்பு பலகை மூலமாக இந்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் ஆசிரியா்கள் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள் மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியா் பணிக்குத் தகுதிப் பெற்றவா்கள் என தேசிய
ஆசிரியா் பயிற்சி நிறுவனம் 2010- ஆம் ஆண்டு அறிவித்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம், 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடா்ந்து 2013, 2017, 2019ஆம் ஆண்டுகளில், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற சுமாா் 80 ஆயிரம் ஆசிரியா்களின் தகுதி சான்றிதழ்கள் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...