Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான்! - Special Article.

 

NEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன?

 


தமிழ்நாட்டில் NEET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 1,21,617

NEET தேர்வு எழுதிய 99,610 தமிழக மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி! 

தேர்வு எழுதியவர்களில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி! 

கடந்த ஆண்டை விட 11 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி!

முதல் 20 மாணவர்களில் 4 வது இடத்தை தமிழக மாணவன்  பிடித்துள்ளார்!

முதல் 20 மாணவிகளில் 14 வது இடத்தை தமிழக மாணவி பிடித்துள்ளார்!

சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம்  + 8.87%

 

தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் = 5550

தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் = 4717 (85%)

இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் = 82926

அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606

((82926-5550) x 0.15))

 

தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் (NEET க்கு முன்பு 833 இடங்கள் மட்டுமே) போக மீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியா முழுவதும் 11606 (ஏறத்தாழ 500% அதிகம்) இடங்கள் உள்ளன என்ற அசுர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது NEET.

 

நீட் தேர்வைக் குறித்த தேவையில்லாத அச்சம், பயம், நம்பிக்கையின்மை, ... என திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பல பிம்பங்கள் பொய் என்பதையும், நம் கல்வியின் பாடத்திட்டம் தரம் குறைந்தது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களால் தேர்ச்சிபெற இயலாது என பலர் சத்தமாக களமாடிக் கொண்டிருந்த வேளையில், “முயன்றால் முடியாதது எதுவுமில்லைஎன்பதையும், நாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், மற்ற மாநில மாணவ மாணவியர்களால் முடிந்து நம்மாலும் முடியும் என்பதையும் நமது மாணவ மாணவியர்கள் நிரூபித்துகாட்டியுள்ளனர்.

 

முதல்  முயற்சியில்  கிடைக்காவிட்டாலும்  துவண்டு  போய்விடாமல், அடுத்த முறை முழு முயற்சியாக "நன்கு திட்டமிட்ட உள்ளார்ந்த பயிற்சி" எடுத்து முதல் மதிப்பெண் வாங்கியது பாராட்டுக்குரியது. 

 

ஆண்டுக்காண்டு, நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்வு சதவீதம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதையும் உணரவேண்டும். மேலும், தமிழக பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் அதிகமாகவும் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

நம் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்கள். கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல அதிக திறமை பெற்றவர்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும்பாலான AIIMS மற்றும் JIPMER கல்லூரிகளிலும்மற்ற மாநிலங்களின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களிலும் அதிக அளவில் நம் தமிழ்நாட்டு மாணவர்கள் இடம் பிடிப்பர். து தொடக்கம் தான். இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வந்து படிக்காத எந்த கல்லூரியும் இல்லை என்ற நிலை உருவாகும். தமிழ்நாட்டிலிருந்து பலர் படிக்கும் நிலை உருவாவதால் நம் மாணவ, மாணவியர்கள் பயமின்றி, பாதுகாப்பாக கல்வி பயிலும் நிலை வெகுவிரைவில் உருவாகும்.

*

NEET தேர்வு பாடத்திட்டம் என்பது NCERT புத்தகங்களை அடிப்படையாக கொண்டு Medical Council of India (MCI) கொடுப்பது. 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு NCERT. மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவுவதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

CBSE பள்ளிகள், NCERT பாடப்புத்தகங்களை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்து பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மேல்நிலைக் கல்வியின் பாடப்புத்தகங்களின் தரம் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட மாநில பாடத்திட்டத்தில் இருந்து, இந்த வருடம் NEET தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் ஏறத்தாழ 90%  கேள்விகள் கேட்கப்பட்டன. மிகச்சிறப்பான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை கொடுத்த நம் தமிழநாட்டு மாநில அரசின் இச்செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

 

NEET நல்லதுதான். அது ஏழை ஜாதி மக்களை நிரந்தரமாக வஞ்சிக்கும் செயலாக உருவகப்படுத்தப்படுவது நல்லதல்ல.

 

மேலும், NEET தேர்வானது நம் தமிழ்நாட்டின் MBBS இடங்களை வட நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது என் வாதமும் தவறானதாகும். ஏனெனில், தமிழ்நாடு மாநில அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் நிரப்பப்படும்.  

 

கிராமப்புறத்தில் படிக்கும் மக்கள், ஏழை மக்களின் மாணவ மாணவியர்களுக்கு NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வுகள் மட்டும் இல்லை உயர்கல்வி கற்பதே சிரமாகத்தான் உல்ளது. இதனை ஈடுகட்ட ஒரு மாவட்டத்தில் ஒரு சில அரசு பள்ளிகள், அரசு மானியத்தில் இயங்கும் பள்ளிகள் இவற்றில் ஒருங்கிணைந்த வகுப்புகள் (Integrated sections) தொடங்கி NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வினை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டு வரலாம்.

 

தனிவகுப்புகளுக்கு செல்ல முடியாத ஏழை மாணவ, மாணவியர்களுக்கு அரசு மானியம் கொடுத்து அவர்களும் NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வுகளில் வெற்றிபெற வைக்கலாமே!

 

அரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு 7.5% இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு பதில் 30%-40% ஒதுக்கீடு செய்ய (சமூகநீதி எல்லாம் உள்ளடக்கியதாக) அரசு முயற்சிக்கலாம்.

 

மாநில அரசின் நிதியில் கட்டிய கல்லூரிக்கு, மத்திய அரசு தேர்வு நடத்துவது, மாநில உரிமையை பறிக்கும் செயல் என கம்பு சுற்றுபவர்களுக்கு ஒரு தகவல்.  மத்திய அரசு நடத்தும் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகமான மருத்துவப்படிப்புக்கான இடங்கள் கூடியிருக்கின்றன.

 

முதல் தடவை எழுதுபவனையும், ஒன்று அல்லது இரண்டு வருடம் சிறப்பு பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற்றவரையும் ஒன்றாக எழுத வைக்கிறது எப்படி சரியான போட்டியா இருக்கும்? என கருத்து கூறுபவர்களுக்கு ஒரு தகவல். NEET தேர்வு வருவதற்கு முன்னர், மாணவர்கள் அடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்வு எழுதி தன் மதிப்பெண்களை உயர்த்திக்கொண்டு, அடுத்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்களும் உண்டு.

 

ஒரு வருடம் கோச்சிங் கொடுத்ததால்தான் நீட் தேர்ச்சி பெற முடிகிறது. இந்தியாவில் / தமிழ்நாட்டில் 70% - 90% மாணவர்கள் ஒரு வருடம் தனியாக கோச்சிங் போவதில்லை. மேலும் போகும் வசதி வாய்ப்பும் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே, NEET தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். அல்லது அதற்கான வாய்ப்புள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.

 

ஒன்றிரண்டு ஆண்டுகள் பயிற்சிக்காக லட்சக்கணக்கில் செலவழிக்க வாய்ப்பும், வசதியும் உள்ளவர்களே மருத்துவராக முடியும் என்ற நிலையை பயிற்சி நிலையங்கள் உருவாக்கியுள்ளன.  NEET தேர்வுகளுக்கான இத்தகைய வசதி வாய்ப்புகளை கிராமப்புற ஏழை மக்கள் நினைத்தும் பார்க்க முடியாது!

 

ஏழை மற்றும் தரமான கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாத மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய அரசு உறைவிடப்பள்ளியான நவோதயா பள்ளிகளை நடத்துகிறது. அப்பள்ளிகளில் பயிலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களைத் தெரிவுச்செய்து online பயிற்சி அளித்து இந்தியா அளவில் பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் மற்றும் உயர்கல்வி இடங்களை கைப்பற்றுகிறார்கள்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் அந்த பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

 

அத்தகைய பள்ளிகளில், NEET, GAAT, JEE, . . . போன்ற தேர்வுகளுக்குத் தயாராகி ஒருவர் மருத்துவ இடத்தை வாங்கவில்லையென்றாலும், எந்த படிப்புக்கு போனாலும் சிறந்து விளங்குவான் என அறிந்து அவர்களுக்கு நல்வழிகாட்டுகின்றனர். தனித்திறன் போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள், . . . ஆகியவற்றில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டால் தான் வெற்றிக்கனியை சுவைக்க முடியும். ஓடத்தெரிந்தவர்கள் எல்லாம் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இயலாது, கலந்துகொண்டாலும் வெற்றி பெறுவது சுலபமல்ல. எங்களுக்கு திறமை ருக்கிறது. ஏன் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியான வாதமல்ல.

 

மேல்நிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் எத்தனை அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர் என்பதும் மகிழ்வைத்தரும் வகையில் இல்லை. அப்போதும் குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட (பயிற்சி) பள்ளிகளில் படித்தவர்களே அதிக இடங்களைப் பிடித்தனர். அப்பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு பாடங்கள் அவசரகதியில் நடத்தப்பட்டோ அல்லது நடத்தப்படாமலோ, இரண்டு ஆண்டுகள் இரண்டாமாண்டு பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பள்ளிகளில் மேல்நிலைகல்வி பயில சில லட்சங்கள் தேவை. பணமிருப்பவர்கள், வசதி வாய்ப்பு இருப்பவர்களின் பிள்ளைகள் மட்டுமே படித்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இது மறுக்கமுடியாத உண்மை. பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட. அப்போதும்கூட மருத்துவ இடங்களை பெற்றார்கள், IIT, NIT க்கு போனார்கள், JEE, GATE., ... இல் தேர்வானவர்கள் என ஆராய்ந்தால் முடிவுகள் வருத்தப்பட வைக்கக்கூடிய அளவில் தான் உள்ளது.

 

நீட் தேர்வு வருவதற்கு முன்னரும் அனைத்து கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்பது யதார்தமான உண்மை. ஆனால் அரசியல்வாதிகளும், குறிப்பிட்ட கல்வியாளர்களும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

 

கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு நன்கு பயிற்சி பெறும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டியது அரசு மட்டும்தான். அரசு பல பயிற்சி மையங்களை உருவாக்கி பயிற்சி அளித்தது. அது மட்டும் போதுமானதல்ல என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

பிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான். அது ஏழை ஜாதி மக்களை நிரந்தரமாக வஞ்சிக்கும் செயலாக மட்டுமே உருவகப்படுத்துவது நல்லதல்ல. அவ்வெண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என சிந்திக்கும் வேளை இது!

 

NEET பயிற்சிக்கு வல்லுனர்களின் சேவையை இலவசமாகப் பெற்று மாணவர்களுக்குக் கிடைக்க செய்வது இயலாத, சிரமமான காரியம். ஏனெனில், த்தகைய பயிற்சிபெற்றவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க தனியார் பயிற்சி மையங்கள் தயாராக உள்ளது.

அரசு செய்ய வேண்டியவை!

அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலில் திறமையானவர்களால் நன்கு பயிற்சி அளித்து, பயிற்சி பெற்றவர்களில் தகுதியானவர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்த மையங்களில், அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தன்னார்வலர்கள், புரவலர்கள், உதவும் மனப்பான்மை உள்ளவர்கள், சமூக அக்கறையுள்ளவர்களை ஒருங்கிணைத்தால் பயிற்சி சிறப்பாக நடைபெறும். இலக்கை எளிமையாக அடைய இயலும். நிறைய அரசுப் பள்ளி மாணவர்கள் NEET, JEE, . . . போன்ற அனைத்திந்திய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவர்.

 

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி, . . . ஆகியவற்றில் மாணவ, மாணவியர்களுக்கு வசதியாக உள்ள சுமார் 500 – 600 பள்ளிகளில் சுமார் 100 மாணவ மாணவியர் படிக்கும் வகையில் (உண்டு உறைவிட) சிறப்பு மையங்களை உருவாக்கி, அதற்கு நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை முழுநேர பொறுப்பாளர்களாக நியமித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். மையத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள திறமை மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களைச் சேர்த்து அவர்களுக்கு பாடம் நடத்துவதோடு, சிறப்புப் பயிற்சியும் அளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

அகில இந்திய போட்டித்தேர்வுகளில் தேர்ச்சிபெற உழைத்த ஆசிரியர்களுக்கு பணப்பலன், சான்றிதழ்கள், விருப்ப மாறுதல், நல்லாசிரியர் விருது அளித்தலில் முன்னுரிமை, . . . அளிக்க அரசு முன் வந்தால் எல்லாம் சாத்தியம். வானம் தொட்டுவிடும் தூரம்தான். நம் உழைப்பில் அரசுப் பள்ளியில் நம்மை நம்பி வரும் ஏழை மாணவ, மாணவியரின் முகத்தில் சிரிப்பைக் காண வழிகாட்டலாம் வாருங்கள்.

 

Article By:

Mr. S. Ravikumar.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive