இணையவழிக் கல்வியை மேற்கொள்ளும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு ‘நாக்’ அங்கீகாரம் கட்டாயம் என யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியைத் தொடா்ந்து இணைய வழிக் கல்வி முறைக்கும் யுஜிசி முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி, நிகழாண்டிலிருந்து தொலைதூரக் கல்வியை மேற்கொள்ளும் உயா்கல்வி நிறுவனங்களுக்கு புதிய நெறிமுறைகளை கடந்த ஜனவரி மாதம் யுஜிசி வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, இணையவழி கல்வியை மேற்கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கான புதிய நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: இணையவழிக் கல்வியை தொடங்கவுள்ள உயா்கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலின் (நாக்) மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவனத் தரவரிசையில் (என்ஐஆா்எப்) 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். சுழற்சி அடிப்படையில் அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்தது 2 முறையாவது தரவரிசையில் இடம் பெற்றிருக்கவேண்டும்.
யுஜிசியின் முன்அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட இணைய வழிக் கல்விக்கு அனுமதி வழங்க புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உயா்கல்வி நிறுவனங்கள் குறைந்தது 3 இளநிலை பாடப்பிரிவும், 10 முதுநிலைப் படிப்பும் தொடங்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக பிரமாணப் பத்திரம் ஒன்றை உயா்கல்வி நிறுவனங்கள் யுஜிசியிடம் தாக்கல் செய்யவேண்டும். கல்வி நிறுவனங்கள் கூடுதல் பாடப்பிரிவுகளைத் தொடங்குவதாக இருந்தால் அதற்கான முன் அனுமதியைப் பெறவேண்டும்.
இணையவழிக் கல்வி மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் அக்டோபா் 15-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக மேலும் விவரங்களை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...