NEET, JEE - அதிரடி பட்டாசுகளுடன் ஆட்டத்தை துவங்கிய அரசு பள்ளிகள். தொடர்ந்து செய்ய வேண்டியவை!
`NEET – வெற்றியை நோக்கியப் பாதையில் பயணிப்போம்!
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எட்டாக்கனியாக விளங்கும், மைய அரசு நடத்தும், AIIMS, JIPMER, NEET,
JEE, GATE, UPSC (IAS, IFS, ICS, IPS), . . . போன்ற
போட்டித் தேர்வுகளுக்கு அறிமுகமும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.
ஆசிரியர் மூன்று வகைப்படுவர். Born
teachers, Produced teachers and Accidental teachers. முதல் இரு
வகை ஆசிரியர்கள் கிடைக்கப்பெற்ற மாணவ, மாணவியர் அதிர்ஷ்டசாலிகள். எவ்வகை ஆசிரியர்களாக இருந்தாலும் கற்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல் இரண்டிலும் திறமை பெற்றவர் வெகுசிலரே. திறம்பட கற்பிப்பவர் பயிற்சி அளித்தலில் திறன் குறைந்தவராகவும், திறம்பட பயிற்சியளிப்பவர் கற்பித்தலில் திறன் குறைந்தவராகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். இவ்விரு
வகையிலும் திறன் பெற்ற ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, அத்தகைய ஆசிரியர்களுக்கு முதலில் திறமையானவர்களால் (இரு
அல்லது நான்கு வார அளவில்) நன்கு பயிற்சி அளித்து அவர்களை
உருவாக்க வேண்டும்.
பயிற்சிக்குப்பின், பயிற்சி பெற்றவர்களில் தகுதியானவர்களைக் கொண்டு அவர்கள்
விருப்பப்படும் தேர்ந்தெடுத்த பயிற்சி
மையங்களில், பணியமர்த்தி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சிறப்பு மையங்களுக்கு அருகில் உள்ள உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்,
புரவலர்கள், தன்னார்வலர்கள், பல்துறை நிபுணர்கள், ஊக்கமளிப்பவர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், சமூக அக்கறையுள்ளவர்களை ஒருங்கிணைத்தால் பயிற்சி சிறப்பாக நடைபெறும். இலக்கை எளிமையாக அடைய இயலும். நிறைய அரசுப் பள்ளி மாணவர்கள் NEET, JEE, . . . போன்ற அனைத்திந்திய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவர்.
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம்,
மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி,
. . . ஆகியவற்றில் மாணவ,
மாணவியர்களுக்கு வசதியாக உள்ள சுமார் 500 – 600 பள்ளிகளில் சுமார் 100 மாணவ மாணவியர் படிக்கும் வகையில் (உண்டு உறைவிட)
சிறப்பு மையங்களை உருவாக்கி,
அதற்கு நன்கு பயிற்சி பெற்ற கணக்கு,
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி ஆசிரியர்களை முழுநேர பணியாளர்களாக
நியமித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மையம் அமைந்த பள்ளியின் மொழி ஆசிரியர்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். மையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில்
உள்ள சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள
திறமை மற்றும் ஆர்வமுள்ள அரசுப்
பள்ளி மாணவ, மாணவியர்களைச் சேர்த்து அவர்களுக்கு பாடம் நடத்துவதோடு,
சிறப்புப் பயிற்சியும் அளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு மையத்தில் உள்ள 100 மாணவர்களை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து தமிழ் அல்லது ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் என காலை மூன்று
வகுப்புகள், மாலை மூன்று வகுப்புகள் (தேவையில்லை என நினைத்தால் அரசுப்
பொதுதேர்வை மனதில் கொண்டு, இடைவேளை இல்லாமல்) கற்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல் என திட்டமிட்டுக்கொள்ளலாம். வாரம் ஒரு நாள் (நேரலை அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட) வீடியோ, பயிற்சி மற்றும் வழிகாட்டல் எனவும், சனிக்கிழமை காலை தேர்வும், மதியம் திருத்துதல் மற்றும் ஆலோசனை என செயல்படுத்தலாம்.
இதுவரை நடந்த NEET, JEE, . . . போன்ற தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்பட்ட வினாக்களைத் தொகுத்து பயிற்சிபெறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கவேண்டும். அவை, எந்தெந்த பாடங்களில் கேட்கப்பட்டுள்ளன? எந்தெந்த அடிப்படையில் (Knowledge,
Understanding, Application, Skill, Interpretation, ...) கேட்கப்பட்டுள்ளன? அவற்றிற்கு எவ்வாறு
பதிலளிக்க வேண்டும்? அவற்றிற்கு பதிலளிக்க, விடைகாண பலவழிகள் இருந்தாலும் எவ்வழிமுறை எளிதானது? விரைவானது? தவறில்லாதது? என புரிந்துகொள்ளும் வகையிலும், அலசும்
வகையிலும் பயிற்சி அமைவது அவசியம்.
NEET தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்பெற எந்த பாடப்பகுதிகளை ஆழமாகவும், தெளிவாகவும், ஐயம் திரிபறவும் படித்து பயிற்சிபெற வேண்டும் என்ற தெளிவையும், புரிதலையும், அவசியத்தையும் மாணவ, மாணவியர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் எதிர்காலத்தில் எந்த வகையான (உயர்படிப்பு அல்லது வேலைவாய்ப்பு) போட்டித்தேர்வையும், தைரியமாகவும், எளிதாகவும், சிரமமில்லாமலும் எதிர்கொள்வர். இதுவே பெரும்பாலான பெரும் மற்றும் குறு வணிகமய பயிற்சி மையங்களின் தாரக மந்திரம். இத்தகைய பயிற்சிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் அளித்து, மெல்ல மெல்ல அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.
அகில இந்திய போட்டித்தேர்வுகளில் அதிக
அளவில் தேர்ச்சிபெற்ற மாணவர்களை உருவாக்கிய மையங்களில், உழைத்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள்,
பணப்பலன், துறைசார் முன்னுரிமை, ... அளிக்க அரசு முன் வந்தால் எல்லாம் சாத்தியம்.
எங்கள் பள்ளியின், மையத்தின் சாதனையைப் பாரீர்! வாரீர்! வாரீர்! என முழுப்பக்க விலம்பரங்களை
வெளியிடும், சாதனை புரியும் அனைத்து வகை வணிகமய கல்வி நிலையங்களின் மாணவ, மாணவியர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சராசரியை ஆராய்ந்தால் உன்மை விளங்கும். ஆம்! அது 400 லிருந்து 495 வரை இருக்கும். இயல்பாகவே, அத்தகைய மாணவ, மாணவியர் தானாகவே நன்கு கற்கும் திறனும், சுயஊக்குவிப்பும் கொண்டவர்கள். அவர்களை சாதிக்க வைப்பது ஒன்றும் கடினமானதல்ல.
அத்தகைய மாணவ, மாணவியர்களுக்கு எதிராக சுய ஊக்கம் குறைந்த, மற்றவர்கள் விமர்சனங்கள் மற்றும் வழிகாடுதல்களால் சுயமாக உள்ள ஆர்வமும் சிதைக்கப்பட்டவர்கள், விழிப்புணர்வு இல்லாத வசதி வாய்ப்பு குறைந்த பணவசதியில்லாத பெற்றோர்களையும், 300 லிருந்து 400 வரை மதிப்பெண் சராசரி உள்ளவர்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள். அவர்களும் இழந்த (இழப்பார்கள் என கூறுபவர்கள் மத்தியில்)
வாய்ப்புகளைப் பெற செயல்படுவோம் வாரீர். அத்தகைய மாணவ, மானவியர்களுக்கு இரண்டாம் பெற்றோராக இருந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் வாரீர்.
நாம் செய்யும் நன்மைகள் எல்லாம் கணக்கில் வைக்கப்பட்டு இறைவனால் பலமடங்கு நமக்கு திருப்பி அளிக்கப்படும் என திண்ணமாக நம்புவோர்களும்
வாரீர். உலகில் அளிக்கப்படும் தானங்களில் எல்லாம் சிறந்தது கல்வி தானம் மட்டுமே! நம்மை இறைபோல் நினைக்கும், ஏழைகள், நலிவடைந்தவர்கள், வாய்ப்பு வசதி குறைந்தவர்கள், ... மட்டுமே பயிலும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களை உயர்த்தி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் வாரீர். விடியல் வெகு தூரத்தில் இல்லை. ஒரே மனநிலையில் சிந்திப்போம்! உழைப்போம்! வெற்றி ஈட்டுவோம்! ஏழையின்
சிரிப்பில் இறையைக் காண்போம் வாரீர்!.
சிவ. ரவிகுமார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...