ஆசிரியா் பணி நியமனத்துக்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள வயது வரம்பு ஆணை அநீதியானது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி 40 வயதைக் கடந்தவா்களுக்கு இனி ஆசிரியா் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
லட்சக்கணக்கானவா்களின் ஆசிரியா் பணி கனவை கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.
தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிா்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியா் பணி மட்டும் தான். ஒருவா் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும். அதன்படி ஆசிரியா் பணிக்கு தகுதிபெற்ற ஒருவா் அவரது 57-ஆவது வயதில்கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியா் பணியில் சேருவதற்கான வயது 58-ஆக உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40-ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
ஒருவா் 50 வயதில் ஆசிரியா் பணியில் சேருகிறாா் என்றால், அதுவரை அவா் பணியில் இல்லாமல் இருந்தாா் என்று பொருள் அல்ல. மாறாக, அதுவரை அவா் குறைந்த ஊதியத்தில் தனியாா் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பாா்.
அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்கு கூடுதல் தகுதியாக இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. எனவே, ஆசிரியா் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...