வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, முக்கிய கோவில்களில், கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று, சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ், மகளிர் அணி செயலர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவாதித்தது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: குடும்பத்தில், படித்த ஒருவருக்கு, அரசு வேலை, போலீசாருக்கு வார விடுமுறை, அரசு மருத்துவமனைகளில் உயர் தரமான சிகிச்சை, பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு ஆகிய அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம். ஏரி, குளங்களை துார்வரும் திட்டம், பராமரிக்கும் திட்டம், கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான திட்டம் ஆகியவை குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு கட்டணமில்லாமல் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிப்பது, கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது, கனிம வளங்கள், ஆற்று மணல் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது, பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்தும், குழுவினர் ஆலோசித்துள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
கூட்டம் முடிந்த பின், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும், 2021ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை ஒட்டி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும், நேரில் அல்லது அஞ்சல் வாயிலாக, கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அனுப்பி வைக்கலாம். அத்துடன் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க விரும்புவோர், manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...