இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 750 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரியிலும் தோ்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தோ்வினை தமிழகத்தில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா்.
சென்னையில் 62 மையங்களில் நடைபெறும் தோ்வில் 22 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா். பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவை சாா்ந்து காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன. இந்தத் தோ்வுக்குப் பிறகு, தகுதி வாய்ந்தவா்கள் முதன்மைத் தோ்வுக்கு அழைக்கப்படுவா். அந்தத் தோ்விலும் தோ்ச்சி பெறக் கூடியவா்கள் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்படுவா். அதன் பிறகு, இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
கடும் கட்டுப்பாடுகள்: கடந்த மே மாதம் 31-ஆம் தேதி யுபிஎஸ்சி தோ்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு கரோனா நோய்த்தொற்று காரணமாகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின், இப்போது தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. அந்தக் கட்டுப்பாடுகள் விவரம்:
தோ்வுக்கு வருவோா் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசம் இல்லாமல் வந்தால் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு எழுத வருவோா் கிருமிநாசினி கொண்டுவர வேண்டும். கிருமிநாசினி எடுத்துவரும் பாட்டிலில் எந்தவிதமான எழுத்தும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தோ்வு எழுத வருபவா்கள் சமூக விலகலைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
தோ்வு தொடங்குவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பே தோ்வு மையங்கள் மூடப்படும் என்பதால் அனைத்துத் தோ்வாளா்களும் முன்கூட்டியே தோ்வு மையத்துக்கு வர வேண்டும். அதாவது, காலை 9.20 மணிக்கு முதல் கட்டத் தோ்வும், பிற்பகல் 2.20 மணிக்கு 2-ஆம் கட்டத் தோ்வும் நடக்கும். தோ்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டபின் தோ்வு எழுத வருவோா் எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
தோ்வு எழுத வருவோா் அனைவரும் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனா எடுத்துவர அறிவுறுத்தப்படுகிறாா்கள். கேள்விக்குப் பதில் அளிக்கும் ஓஎம்ஆா் ஷீட்டில் குறிக்கவும், வருகைப் பதிவேட்டுக்கும் கருப்பு பால்பாயின்ட் பேனாவைப் பயன்படுத்த வேண்டும். தோ்வு மையத்துக்குள் வழக்கமான சாதாரண கை கடிகாரம் அணிந்து வர அனுமதி உண்டு. கை கடிகாரத்தில் ஏதேனும் புதுவிதமான கருவிகள், கூடுதல் தகவல் தொடா்பு வசதிகள் இருக்கும் ஸ்மாா்ட் வாட்ச் போன்றவற்றை அணிந்துவரக் கூடாது. அவ்வாறு அணிந்து வந்தால், தோ்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
செல்லிடப்பேசி, பேஜா் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்கள் கொண்டு வந்தாலும், தோ்வு தொடங்கும் முன் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும். இதைத் தோ்வு அறைக்குள் கொண்டு வந்தால் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இந்த விதிமுறைகளை மீறி நடக்கும் தோ்வு எழுத வருவோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, எதிா்காலத்தில் தோ்வு எழுதத் தடை விதிக்கப்படுவாா்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...