ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-ல் இருந்து 249 ஆக நடப்புக் கல்வியாண்டு முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக் கிளையில் 37 இடங்களும், காரைக்காலில் 12 இடங்களும் கூடுதலாக உள்ளன.
புதுச்சேரியிலுள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி உள்பட பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம். இங்கு நடப்புக் கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது நீட் கலந்தாய்வு முறையில் நடத்தப்படும் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் ஜிப்மரில் புதுச்சேரிக்கு 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதம் தரப்படுவதால் தற்போது 49 இடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நடப்புக் கல்வியாண்டில் 249 இடங்கள் இருக்கும்.
புதுவை ஜிப்மர் கல்லூரியில் 150 இடங்கள் இருந்த நிலையில், தற்போது 37 இடங்கள் அதிகரித்து 187 ஆக உயர்ந்துள்ளது. காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் 50 இடங்கள் இருந்த நிலையில், தற்போது 12 இடங்கள் அதிகரித்து 62 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் டீன் (கல்வி) பங்கஜ் குந்த்ரா கூறுகையில், "பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான சட்டரீதியான இட ஒதுக்கீட்டைக் கொண்டு இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.
அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீதம், எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதம், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படும். புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இரு வளாகங்களிலும் விகிதாச்சார வசதிகளை வலுப்படுத்திய பின்னர், இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டனர்.
புதுவை மாணவர்களுக்கு இதுவரை 54 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்து வந்த நிலையில் இடங்களை அதிகரித்ததன் மூலம் இனிமேல் 64 இடங்கள் கிடைக்கும் என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...