ஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
யுஜிசி வழிகாட்டுதலின்படி, முதல் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே ஆன்லைன் தேர்வுகளில் ஏராளமான மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை. இணைய இணைப்பு, அதன் வேகம் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுவதாக மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்.19-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், மாணவர்கள் விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போனதாகக் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக மீண்டும் பல்கலைக்கழக இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில், ஆன்லைன் தேர்வை எழுத முடியாத காரணத்தைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். சேர்க்கை எண், தேர்வு எழுத விரும்பும் பாடம் ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...